A Nation progresses only with the Best Critics

Art of Critique with Love, care & Concern

Saturday, December 28, 2024

எங்கே போகிறாய் தமிழகமே ????

 

இன்று 27.1.2.2024  தமிழ் நாட்டு மக்களின் மனநிலை -நம்மால நடப்பது எதையும் தடுக்கவும் முடியாது மாற்றவும் முடியாது என்ற கையாலாகாத நிலைமை தான். 

சுமார் நாலு வருடத்திற்கு முன் தான் ஐ.பி.எஸ் கஷ்டப்பட்டு படித்து, உயர் பதவிகளுக்கு போய் நல்ல பெயர் வாங்கி, மக்களால் பாராட்டு பெற்ற பின், எனது மாநில அரசியல் நிலை மாற வேண்டும் என்று உயர் போலிஸ் அதிகாரி என்ற பதவி, வேலை, சம்பளம் என்று அனைத்தையும் உதறிவிட்டு ஒருவர் அரசியல் களத்தில் குதித்த போது, அரசியல், சினிமா, கிரிக்கெட் சம்பந்தமில்லாமல் ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்ற ஆர்வம் மக்களுக்கு ஒரு மாற்றம் வரும் என்ற ஆசை தோன்றியது. 

2021 சட்டசபை தேர்தல் 2024 மக்களவை தேர்தல் தோல்விகள் திரு அண்ணாமலையை மிகச் சோர்வடைய செய்து இன்று தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டு போகும் அளவிற்கு மன விரக்தி அடைந்துவிட்டாரா ? என்ற கேள்வி நேர்மை விரும்பும் பல அப்பாவி கையாலாகாத மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. 


கடந்த 50 வருட கால அரசியல் என்பது அடியாள் பலம் கொண்ட சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே இங்கு அரசியல் செய்ய முடியும் என்ற நிலை தான் நிலவுகிறது. இன்று தமிழ்நாட்டில் யாரும் யாரையும் நம்பக் கூடிய நிலையில் இல்லை. பெற்ற தாய் தந்தையரே தங்கள் பிள்ளைகள தாங்கள் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்றால் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை தான் உள்ளது.

இதுவும் தவிர கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கந்து வட்டி, போதை பொருட்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இந்த நேரம் காவல் துறையில் நேர்மையாக யாரேனும் வேலை பார்த்தால் அவர்கள் கையாலாகாத நிலைக்கு தங்களை தாங்களே அடித்து கொள்ள தான் முடியும்.

ஆனால் அதை ஏன் காவல் துறை விட்டு விலகிய காவலாளர் செய்ய வேண்டும் ???

"மன்னன் எவ்வழி. மக்கள் அவ்வழி "

இன்று ஆட்சி செய்யும் மன்னர்கள் பலரும் மக்கள் தங்களை தாங்களே சட்டையை கிழித்து கொண்டு அலையும் அளவிற்கு தான் ஆள்கிறார்கள். பெரும்பாலான மக்களும் பணத்தின் வாசனைக்கு மட்டுமே கட்டுபட்டவர்கள் போல் நடந்து கொள்வதால், இந்த ஊழல் மிகு சமுதாயத்தை தேர்தல் கொண்டு மாற்ற முடியுமா என்ற நம்பிக்கையை ஓட்டுக்கு பணம் நடைமுறை மாற்றி விட்டது.

இதனால் மக்கள் மனதளவில் ஒரு விரக்தியுடன் நடை பிணம் போல் தான் வாழ்கிறார்கள். ஓட்டிற்கு லஞ்சம் வாங்கிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி வேறு சில பேருக்கு. 

இதில் சில அம்பிகள் மட்டும் அவ்வப்போது "அன்னியன்" ஆகிவிடுகிறார்கள். 


"வாங்க வாங்க மணியாச்சி. சீக்கிரம் போய் படுக்கலாம். இவன் இப்படி தான் தேவை இல்லாம எதையாவது எழுதுவான் " என்று அங்கலாய்பவர்களுக்கு ஒரு நற் செய்தியை படித்து விட்டு நல்லா தூங்குங்களேன். ( "நீங்க தூங்கி எழுந்ததால மட்டும் விடிஞ்சுடவா போகுது" மைன்ட் வாய்ஸ் )



ஒரு நல்ல சேதியை கொளுத்தி போடுவோம் :

ஓரு ஆன்மீக பெரியவர் 2021 தேர்தல்ல திமுக வை திட்டி வந்தவர். ஆட்சிக்கு வரக் கூடாதுன்னு விரும்பியவர். ஆனால் அவர் விருப்பத்துக்கு மாறா அவங்க ஆட்சிக்கு வந்ததும் அவர் வணங்கும் கடவுளிடம் கேட்டிருக்கிறார் "நாங்கள் எல்லாம் எவ்வளவு விரும்பியும் இப்படி செய்யலாமான்னு கேட்டிருக்கிறார்?" அதற்கு அந்த கடவுள் " சட்டையை கிழிச்சு கிட்டு அவர் ஓலமிட்டதால் அவர வர வெச்சேன். முன்னாடி அந்த அம்மா "தலைவிரி" கோலமா சட்டசபையில் சபதம் போட்ட போதும் அதனால் தான் அவங்கள் வர வச்சேன்" சாமி👦👦 சொல்லிடுச்சாம்.


இதனாலேயே அறிவு பூரவமா பேசி இந்த மக்கள் கிட்ட ஓட்டு வாங்க முடியாதுன்னு முடிவெடுத்து , ஒரு உணர்ச்சி பூர்வமா இவங்கள உசுப்பி விட்டு பாப்போம்' னு 

சட்டயை கழட்டி விட்டார், 

சாட்டையை சுழற்றி விட்டார்,

செருப்பை கழட்டி விட்டார்.  

அப்ப இந்த கட்டுரையை மற்ற எதிர்கட்சிகாரங்களெல்லாம் படிச்சிட்டா என்ன ஆகும் ? அப்பறம் அவங்க எல்லாம் எதை கிழிச்சுக்கலாம்னு திட்டம் போட ஆரம்பிச்சுடவாங்களே. அதனால மக்களே ! இந்த கட்டுரையை படித்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கோ, விஜய்கோ, சீமானுக்கோ அனுப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 


                                                          சகிருட்டிஸ் 27.12.24

                                                   Sakritease December 2024

 

Friday, December 20, 2024

விஸ்வகர்மா ஆனந்த் Vishwa Karma Anand

 

டந்த வாரம் உலக சாம்பியன் செஸ் சாம்பியன் பட்டத்தை
18 வயதில் கைப்பற்றிய மிக இள வயது வீரர் ஆனார் திரு. குகேஷ் தொம்ம ராஜு.

குகேஷ் இந்த இளம் வயதில் உலக சாதனை படைக்க அடித்தளம் அமைத்து கொடுத்தது முன்னாள் உலக சாம்பியன் திரு. விஸ்வநாதன் ஆனந்த் அவர்களே. தான் மட்டும் சாம்பியன் என்பதோடு நிற்காமல் தனது அடுத்த தலைமுறை பிள்ளைகள் கூட சதுரங்கத்தில் தலை சிறந்து விளங்க வேண்டும் என்று அயராது உழைத்து திரு. குகேஷ், திரு. பிரக்யானனந்தா, செல்வி. வைஷாலி என்ற எண்ணற்ற தொழில்முறை சதுரங்க போட்டியாளர்களை சென்னையை தலைமை இடமாக கொண்டு உருவாக காரணமான திரு. ஆனந்த விஸ்வநாதன் ஒரு விஸ்வகர்மா.

இதற்கு ஆனந்தின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த தமிழக மற்றும் இந்திய அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள். 

விளையாட்டுகளை ஊக்குவித்த முன்னாள் முதல்வர் செல்ல்வி ஜெ.ஜெயலலிதா, இன்றைய துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் வரை அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அதே சமயம் எதற்கெடுத்தாலும் அரசியல் தலைவர்கள் பெயரையே அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய பணியையே பறை சாற்றும் அரசுகள் , கடற்கரையெங்கும் சமாதிகளும் சிலைகளையுமே கட்டும் அரசுகள் , ஆனந்த் போன்ற தன் துறையில் ஜொலிக்கும் உன்னத விளையாட்டு வீரரை அவர் இருக்கும் காலத்திலேயே போற்றி "ஆனந்த் சதுரங்கம்" என்ற சதுக்கத்தை (SQUARE) உருவாக்கி அதில் நிஜமாகவே மனித அளவில் உள்ள செஸ் காய்களுடன் விளையாட வாய்ப்பளிக்க வேண்டும். இதனை எலியட்ஸ் பீச் போன்ற மீனவர் வாழ்விடங்கள் அருகில் அமைத்து மீனவ சிறுவர்களுக்கும் செஸ் விளையாட ஊக்கப்படுத்த வேண்டும்.  ஆனந்தை விட சதுரங்களுடன் தொடர்புடைய யார் என்று சொல்லுங்க அண்ணா ?

விஸ்வகர்மா யார்  ?
தான் கற்ற கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் யாரும் விஸ்வகர்மா தான். இந்த பெயரில் மத்திய அரசு ஒரு திட்டத்தை சமீத்தில் கொண்டு வந்ததது. அதற்கு மாநில அரசு அது குல கல்வி திட்டம் என்று அதனை எதிர்த்து "கலைஞர் கைவினை திட்டம்" என்ற ஒன்றை கொண்டு வந்து உள்ளனர். 
கைவினை கலை பொருட்களுக்கு தயாரிப்பு செலவுகள் அதிகமாக இருப்பதாலும் அதன் விற்பனை விலைகள் எல்லோரும் வாங்கும்படியாக இல்லாததாலும் அந்த பொருட்களுக்கு உலகளாவிய சந்தை அவசியம். தமிழ்நாட்டின் கைவினை பொருட்கள் பல நாடுகளுக்கு செல்வது தமிழ் நாட்டை தான் பிரபலப்படுத்தும். அதற்கு மத்திய அரசுடன் மாநில அரசும் ஒத்துழைத்து அதன் நடுவில் அவர்கள் கட்சிகளின் சித்தாந்த மோதல்களை தவிர்க்க வேண்டும்.

கலைஞர் என்பதற்கும் உலகமாகலைஞர் என்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. முக்கியமாக கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் பெருமளவு முன்னேறும். 

விஸ்வநாதன் ஆனந்த் ஒரு விஸ்வகர்மா
இந்த தலைப்பை பார்த்ததும் இந்திய ஜாதி அரசியல் ரீதியாக அவரின் ஜாதியாக, தவறாக சித்தரிப்பதாக சொல்ல வாய்ப்புள்ளது.
ஆனால் யார் ஒருவர் ஒரு கலையில் தானும் சிறந்து அடுத்த தலைமுறைக்கும் அந்த கலையை கொண்டு செல்கிறாரோ அவர் ஒரு சிறந்த குரு - விஸ்வகர்மா. 
அந்த வகையில் திரு விஸ்வநாதன் ஆனந்த் ஒரு சிறந்த விஸ்வ கர்மா ஆகிறார்.

விவசாயியின் மகன் / மகள் விவசாயி இல்லை :
என்றென்றும் அனைத்து வயிர்களுக்கும் உணவு படைத்த விவசாயம் என்னும் கலை இன்று மிகவும் கவலைகிடமான நிலையில் உள்ளது.
இன்று எந்த விவசாயியும் தன் மகனையோ / மகளையோ பெரும்பாலும் தனக்கு பிறகு தன் குடும்பத்தில் யாரையும் விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்புவதில்லை. முன்னொரு காலத்தில் அந்த கிராமத்து பெரியவர்களுக்கு விவசாயத்தையும் அந்த ஊரில் விளையக் கூடிய மூலிகைகள் பற்றிய பட்டறிவு இருந்தது.
1000 கணக்கில் பாரம்பரிய நெல் வகைகளை வகைப்படுத்தி எந்த வெள்ளத்திலும் முழுகாத நெல் பயிர்களை வளர்த்து வந்தனர். 
ஆனால் 1960களில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய குட்டை ரகங்களால் வெள்ளத்தில் நெற் கதிர் முழுகி வருடா  வருடம் வெள்ள நிவாரணம் கேட்கும் அவல நிலையில் விவசாயிகள் உள்ளனர். 
இதனை தடுக்க தன்னார்வ விவசாயிகள் அங்கங்கே பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு வருகின்றனர். 

பாம்பு கடிக்கும் , பிற விஷக் கடிக்கும் அந்த கால விவசாயிகள் மூலிகைகள் கொண்டு வைத்தியம் பார்த்தனர். இது போல் தச்சர், கருமார், மண் பாண்டம் செய்வோர் பல அனுபவ அறிவை பெற்றிருந்தனர். 

ஆனால் என்று தமிழக் அரசு பள்ளியில் பெறும் கல்வி அறிவே மிகப் பெரியது என்று முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியதோ அன்றே விவசாயிகளையும், பாரம்பரிய கருமார், தட்டான், தச்சர், நெசவாளர் என்ற அனைத்து வீட்டு பிள்ளைகளும் தங்கள் பெற்றோரின் அனுபவ அறிவினை துச்சமென நினைத்தனர். ஊருக்கே சிகை அலங்காரம் செய்தவர்கள் மிகச் சீரிய பாரமபரிய மருத்துவ முறைகளிலும் தேர்ந்து இருந்தனர். ஆனால் அவர்கள் வழி வந்தவர்களிடம் தொழிலை பற்றிய தாழவு மனப்பான்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பல கலைகள் அன்றைய பாரம்பரிய கலை நுணுக்கங்கள் தொலைந்து , உருக் குலைந்து போய் விட்டன. 

இராஜாஜி என்னும் தீர்க்க தரிசி :
காலையில் பள்ளிக் கல்வியுடன் கூட மதியத்தில் தாங்கள் விரும்பும் கலையை கற்கும் முறையை 1950 களில் மதறாஸ் மாகாண முதல்வர் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவருமான திரு சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியார் என்ற இராஜாஜி கொண்டு வந்தார். ஆனால் அன்று அந்த மூதறிஞரின் மூதுரையின் ஆழத்தை உணராமல் அதனை "குல கல்வி திட்டம்" என்று பழித்து அவரை முதல்வர் பதவியில் இருந்து விலகச் செய்து பெருந்தலைவர் காமராஜர் முதல்வரானார்.  அவர் பல பள்ளிக் கூடங்களை திறந்து எல்லோரையும் பள்ளிக் கூடத்திற்கு கொண்டு வந்தாலும் அவர்களின் பெற்றொரின் அனுபவ அறிவை மதிக்காத ஏட்டறிவே பேரறிவாக போற்ற தொடங்கினோம். அதன் பயனாக இன்று பலருக்கும் நெல்லும், பருப்பு வகைகளும் எங்கு விளைகிறது என்பதே தெரியவில்லை.

இன்று நெல் வயலில் நாற்று நடக் கூட தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு தெரியவும் இல்லை அதனை ஒரு அருவருப்பான அழுக்கான தொழிலாக நினைப்பதால் , இன்று விவசாய வேலைக்கே வட இந்தியாவில் இருந்து வயலுக்கு நாற்று நட வருகிறார்கள். 
தமிழ் நாட்டில் பள்ளி , கல்லூரிகளில் படித்த பலருக்கும் சொந்தமாக தொழில் செய்யக் கூட படிப்பு உதவாததால் பலரும் வேலை இல்லாமல் போதையில் அலைகிறார்கள். வேறு பலர் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை இல்லை என்று நகரங்களில் வண்டியில் கொண்டு போய் வீடு வீடாக உணவளித்து வருகிறார்கள். உணவு உற்பத்தி செய்யும் பெற்றோரின் அறிவை மதிக்காமல் போனதால், அவர்கள் நிலத்தை விற்று படிக்க வைத்த படிப்பு மறுபடியும் அவர்களை உணவை நோக்கியே திருப்பி விட்டுள்ளது. இதுவும் ஒருவகை கர்ம வினையே.

நாம் என்றும் உயர்வாக பார்க்கும் மேற்கத்திய நாடுகளில் -இறந்தவரின் உடல்களை அடக்கம் செய்யும் தொழில் செய்பவர்கள் "UNDER TAKER" என்று தங்கள் குலப் பெயர் போட்டுக் கொள்ளும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆனால் அதே வேலையை நமது நாட்டில் செய்தால் கௌரவ குறைச்சலாக பார்க்கிறோம்.

இது நமது நாட்டில் அரசியல் ஆதாயங்களுக்காக, தன்னம்பிக்கையை குலைக்கும் விதமாக செயலாற்றுவதை நிறுத்துவோம்.

குலக் கல்வி மட்டமா ?
( 2020 ல் எழுதப்பட்ட சகிருட்டிஸின் இந்த கட்டுரையையும் படித்து பாருங்கள் https://sakritease.blogspot.com/2020/07/rajajiyum-kamarajurum-kalviyum.html )

எந்த பெற்றோரும் தன்னிடம் உள்ள சிறப்பை தன் பிள்ளைகளுக்கு கற்று தரவே அதிகம் விரும்புவர் அதுவும் தவிர அதற்கான வாய்ப்பும் அந்த குழந்தைகளுக்கு நேரடியாக பெற்றோரின் செயல்பாடுகளால் கற்றுக் கொள்ள வாய்ப்பு அதிகம். 

இதனாலேயே இன்றைய தமிழக முதல்வரின் குடும்பத்தில் தந்தையின் தொழிலை எளிதாக மகன் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை காண்கிறோம். இது தவறா ? தவறில்லையா ? என்பதை விட தந்தை தொழிலை பிள்ளைகள் கற்றுக் கொள்ளவே வாய்ப்பு அதிகம் என்பதே யதார்த்தம். இதே கட்சியே குல கல்வி திட்டம் என்று விஸ்வகர்மா திட்டத்தை எதிர்ப்பது ஆச்சரியம் ??

முன்று தலைமுறை நடிகர்கள்
மருத்துவர்கள் தலைமுறை
பரம்பரை நீதிபதிகள்

விஸ்வநாதன் ஆனந்த் போல் அடுத்தவர்கள் பிள்ளைகளுக்கும் தன் பிள்ளைகள் போல் போல் கற்றுக் கொடுக்கும் பலரும் இருக்கிறார்கள்.
இன்று தமிழ் நாடெங்கும் ஆட்டோ மொபைல் மெக்கானிக்காக பணியாற்றும் பலரும் அவரின் குருகளிமிருந்து ஸ்பேனரில் அடி வாங்கியே தொழில் கற்றும் முன்னேறி வருகிறார்கள். பள்ளி கல்வி பிடிக்காத / வராத பல மாணவர்களின் புகலிடமாக மெக்கானிக் கடைகள் ஆகிவிட்டன. 

இதுவே குரு குல கல்வி முறையாக ஒருகாலத்தில் இருந்து வந்து கல்வி வளர்த்தது. நிழலை பார்த்தே நேரத்தை சொல்லும் அளவிற்கு இருந்த அறிவு வளர்ச்சியை நாம் அதுவும் கல்வி தான் என்பதை உணர தவறி விட்டோம். 


கல்வி கற்பிக்கப்படலாம ஆனால் அது அறிவாகாது. அது அனுபவத்தில் பயன்படுத்த தொடங்கும் போது தான் அந்த கல்வி அறிவாகிறது. இதனாலேயே இன்றைய உலகின் பெரிய பணக்காரராக இருக்கும் திரு. எலான் மஸ்க்கும் பெரிய கல்வி நிறுவனங்களில் படித்தவர்களை விட அதிகம் அனுபவம் அறிவு கிடைக்கும் பிளம்பர், எலக்டீரிஷியன் போன்ற படிப்புகளை கற்க சொல்கிறார்.

பெற்றோர்களே ! இன்று படிப்பதற்கு எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. உங்கள் பிள்ளைகளின் ஆர்வம் அறிந்து அவரவர் விரும்பும் துறையில் மிளிர முடியும். அதற்கும் தொழிற் மேம்பாட்டு பயிற்சிகளையும் அரசாங்கம் கொடுக்க முயன்று வருகிறது. 

நம்மிடையே இன்னும் பல
பாரதிகள்,
தமிழ் தாத்தா உ வே சா,
ஸ்ரீனிவாச ராமானுஜம்,
சி.வி.ராமன்,
விஸ்வநாதன் ஆனந்த்,
ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்
ரவிசந்திரன் அஸ்வின்,
சுந்தர் பிச்சை,
ருக்மிணிதேவி,
டாக்டர் சாந்தா,
எம்.எஸ். சுப்பு லக்ஷ்மி,
இளையராஜாக்கள்,
நம்மாழ்வார்கள்
போன்ற விஸ்வகர்மாக்கள் 
உருவாக வாய்ப்புள்ளது. 

அதற்கு அனுபவ கல்விக்கும், பள்ளிக் கல்விக்கும் இருக்கும் இடைவெளியை குறைப்போம்.
 முக்கியமாக இயற்கையை பாதுகாக்கும் கல்வியை 
முதலில் பெரியவர்கள் கற்றுக் கொள்வோம்.
உருவத்தில் சிறியவர்கள் விரும்பி கற்று கொள்வர்.

இதற்கு பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒரு தடையாக இருக்கக் கூடாது. அதற்கு சாதி சான்றிதழ்கள் இல்லாமல், மத அடிப்படைகள் இல்லாமல், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை முன்னேற முதல் வாய்பளிப்போம்.

குறுகிய  அரசியல் எண்ணங்களை அறவே ஒழிப்போம். 


20 டிசமப்ர் 2024