கடந்த 9.10.25 கோவையில் 10 கிமீ நீளத்திற்கு ஒரு மேம்பாலத்தை திறந்து அந்த பாலத்திற்கு "ஜி டி நாயுடு மேம்பாலம்" என்று பெயர் சூட்டியுள்ளது தமிழக அரசு.
அதே நாளில் தமிழ் நாட்டில் உள்ளதெருக்களின் பெயர்களில் பலகைகளில் ஜாதி பெயர் நீக்கப்பட வேண்டும் என்ற அரசாணை வெளியிடபட்டதாக எல்லா ஊடகங்களிலும் செய்தி வந்தது.
இரண்டு நிகழ்வுகளும் அடுத்த அடுத்த நாட்களில். அரசாங்கம் ஜாதி பெயர்களை நீக்க வேண்டும் என்று சொன்ன மறுநாளே அரசாங்கமே "நாயுடு" என்ற ஜாதி பெயருடன் ஒரு மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்கள்.
கோவையின் தொழிற் புரட்சியின் தந்தை என்று போற்றத்தக்க விஞ்ஞானி திரு. ஜி.டி. நாயுடு அவர்களின் அடையாளம் "நாயுடு" என்ற குறிப்பை நீக்கி விட்டால் "ஜி டி" என்று யாரை குறிப்பிடுகிறார்கள் என்று யாருக்குமே தெரியாமல் போய் விடும்.
அதே போல் தான் முன்னாடி காலத்தில் பெயர் வைத்தவர்களும் அவர்களின் ஜாதி பெயர் அல்லது இனப் பெயர் இல்லாமல் அவர்களை அடையாளப்படுத்தவே முடியாது.
பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் அய்யா அவர்களை அவர் வாழ்ந்த காலகட்டத்தில் "தேவர்" என்ற ஒரே சொல்லால் தான் அறிப்பட்டார். அதனால் அவர் பெயர் வைத்த சாலைக்கு "பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை" என்று "தேவரை" நீக்கி உள்ளார்கள்.
இன்றளவும் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனாலும் அரசியல் கட்சிகள் அனைத்தும் அந்தந்த தொகுதியில் அதிக எண்ணிக்கையில் உள்ள ஜாதியினரையோ அல்லது மதத்தை சேர்ந்தவரையோ தான் அந்தந்த தொகுதி வேட்பாளரை தான் நிறுத்துகிறார்கள். ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் தெரு பெயர், ஊர் பெயரில் நீக்கியதால் மட்டும் மாறாது என்பதே யதார்த்த உண்மை.
இன்றைய இளைஞர்களுக்கு , அதுவும் 2000 பிறகு பிறந்தவர்களுக்கு , Gen Z என்று குறிப்பிட படக் கூடியவர்களுக்கு நடை முறையில் ஜாதி பற்றி தெரியக் கூடிய வாய்ப்பே "ஜாதி சான்றிதழ்கள்" மூலமாகவே தெரிய வருகிறது.
அரசு பள்ளிகளில் ஒண்ணாவது சேர்க்கவே "ஜாதி சான்றிதழ்" கேட்கபடுகிறது, வழங்கப்படுகிறது. அதனால் உண்மையாகவே "ஜாதி , மத" அடையாளங்களை ஒழிக்க வேண்டும் என்றால் "ஜாதி , மத" சான்றிதழ்கள் வழங்குவதை தான் முதலில் நிறுத்த வேண்டும்.
இன்றைய வேகமாக நகரமயமாக்கப்பட்டு வரும் தமிழ் நாட்டில் "ஜாதி , மத" சான்றிதழ்கள் வழங்கப்படா விட்டால் இன்றைய தலைமுறையினருக்கு அவர்கள் வீட்டில் வாழும் வாழ்க்கை முறையை வைத்து " எந்த ஜாதி" என்று தெரியக் கூடிய வாய்ப்பு மிக குறைவு.
வெள்ளைகாரன் காலத்தில் இருந்து " பிரித்து ஆள்வதே" ராஜ தந்திரம் என்று நமக்கு போதிக்கப்பட்டதால், மக்களுக்குள் ஒற்றுமை வராமல் இருக்க, பிரிவினையை தூண்டுவதற்காக பயன்படுத்துவதே "ஜாதி, இன, மொழி, மத" வேறுபாடு அரசியல்.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் மக்கள் நேரடியாக உணரக் கூடிய ஒரே வேறுபாடு " ஏழை" "பணக்காரர்" என்பது மட்டுமே. இது எந்த மதம், எந்த ஜாதியாக, எந்த மொழிக்காரராக இருந்தாலும் பணம் படைத்தவர்கள் ஏழைகளுடன் எந்தவிதமான உறவுகள் வைத்து கொள்ளவும் விரும்புவதில்லை.
எல்லா ஏழை பெற்றொர்களும் தாங்களும் எப்படியாவது பணம் சம்பாதித்து "பணக்காரர்" ஆனால் இந்த சமூகம் நம்மை மதிக்கும் என்பதற்காக அன்றாடம் போராடி வருகின்றனர்.
"மேம்பாலங்களும் கார் வைத்திருப்பவர்களுக்காகவே கட்டப்படுகிறது "
கார்கள் வைத்திருப்பவர்கள் எங்கு வேண்டுமானாலும் வேக வேகமாக சீறிப் பாய வேண்டும் என்பதற்காகவே மேம்பாலங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
இந்தியாவை போல் அதிக மக்கள் தொகை உள்ள நாடுகளில் பாதசாரிகளான, பொது பேரூந்துகளில், ரயில்களில் பயணிப்பவர்களே மிக அதிகம். அனைத்து பஸ்களும் ரயில்களும் பிதுங்கி வழிகின்றன. 80 சதவிகிதம் பேர் பயன்படுத்தும் போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு முதலீடுகள் மிக குறைவு. ஆனால் கார்கள் வேக வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காகவே அதிக முதலீட்டுடன் மேம்பாலங்கள் அதுவும் 10 கிமீட்டருக்கு திறக்கப்படுகிறது. ஏனென்றால் அரசியலவாதிகள், அரசு அதிகாரிகள், விஐபிக்கள் அனைவருமே கார்களை மட்டுமே பயன்படுத்தி விற்றென்று விமானத்தில் பறக்க மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன.
இந்த "ஜி டி நாயுடு" மேம்பாலத்திலும் அதிமாக பொது மக்கள் பயன்படுத்தும் மாநகர பேருந்துகள் செல்லாது, செல்லவும் விடமாட்டார்கள். 20 சதிவிகிதம் மக்கள் வேகமாக செல்ல 80 சதவிகதம் மக்கள் எந்த வசதியும் இன்றி மிக மெதுவான வாழ்க்கை முறையை பல இன்னல்களுடன் அனுபவிக்க நேருகிறது.
பாதசாரிகள் நடப்பதற்கு சாலைகளில் வசதிகளே இல்லை. பாதசாரிகளை வண்டி ஓட்டிகள் மதிப்பதில்லை. சமுதாயத்தில் நம்மையும் யாராவது மதிக்க வேண்டும் என்பதற்காகவே பல பாதசாரிகளும் மாத தவணை கடன்களை வாங்கி "சமூக அந்தஸ்து" பெற முயற்சிக்கிறார்கள். அதனாலேயே சாலை எங்கும் இரு சக்கர வாகனங்கள் பெருகி உலகளவில் இந்தியாவும், இந்திய அளவில் தமிழ்நாடும் " சாலை விபத்துகளில் நம்பர் ஒன்னாக" திகழ்கிறார்கள்.
இதனை பொது மக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டு பேருந்துகளை இயக்கிய மனித நேயர்கள் திரு ஜி டி நாயுடு, திரு டி வி சுந்தரம் அய்யங்கார் போன்றவர்கள் இன்று இருந்திருந்தால் அனைத்து பொதுமக்களுக்கும் பயன்படக்கூடிய சீரிய தொழிற் நுட்பத்தை கொண்டு வந்திருப்பார்கள்.
இன்று கோவை உற்பத்தி துறையில் , மென் பொருள் துறையில் தமிழ் நாட்டிலேயே முதல் மாவட்டமாக நிற்பதற்கு காரணம் அய்யா ஜி டி நாயுடு ஜாதி பாகுபாடின்றி அனைவருக்கும் தொழிற் கல்வி கொண்டு சென்று பல ஏழை மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியதால் தான். விவசாயத்திலும் அவரின் முன்னெடுப்புகளால் தான் விவசாய பல்கலைகழகம் கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.
இத்தனைக்கும் நாயுடு அய்யா எந்த பல்கலைகழகத்திலும் சென்று எந்த பட்டமும் படிக்கவில்லை. அவருக்கு இருந்தது சமூகத்தின் மீது இருந்த அக்கறை, அன்பு மற்றும் தொழிற் பண்பு.மக்கள் அனைவருக்கும் தேவை -
தன்னம்பிக்கை ஊட்டும் கல்வி,
தன்னிறைவோடு வாழும் பொருளாதாரம்,
அனைவருடனும் வளங்களை பகிர்ந்து கொள்ளும் நல்ல மனோபாவம்.
இதற்கு மக்களிடையே எந்த வகையிலும் பேதம் பார்க்காத, பிரிக்காத அனைவரின் வளர்ச்சியையும் உறுதிபடுத்தும் அரசியல் அமைப்பு வேண்டும்.
இதற்கு "ஓட்டு உண்ணி" அரசியல்வாதிகள் மனம் மாற வேண்டும். குறுகிய மனப்பான்மையோடு செயல்படும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மனம் விரிவடைய முயற்சிக்க வேண்டும். அப்போது தான் அனைவரின் முன்னேற்றம் சாத்தியம்.
சகிருட்டிஸ்
12. அக்டோபர் 2025