A Nation progresses only with the Best Critics

Art of Critique with Love, care & Concern

Saturday, September 16, 2023

உரிமைத் தொகை சாதனையா ? வேதனையா ??


 நேற்று ( 15.9.2023 ) முதல் தமிழ் நாட்டில் பல பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்க ஆரம்பித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உதவித் தொகை அல்ல உரிமை தொகை என்றதுமே பெண்களுக்கு போய் சேர வேண்டியது போய் சேராமல் இருப்பது அவர்கள் கைகளுக்கு சென்று சேர அரசின் முயற்சியால் நடப்பது போல் அந்த சொல் பயன்பாடு தெரிவிக்கிறது. 

பெண்கள் அவர்கள் வீட்டில் அவர்கள் செய்யும் வேலைக்கு அரசாங்கம் பணம் தர வேண்டும் என்ற வகையில் சொன்னாலும் தங்கள் வீடு என்று உரிமையுடன் செய்யும் பெண்களை இந்த சிந்தனை சிறுமைபடுத்தாதா ??? என் வீடு, என் குடும்பம், என் மக்கள் என்ற சிந்தனையை இந்த தொகை சிதைய செய்யாதா?? ஏற்கனவே என் நாடு என்ற சிந்தனையை ஓட்டுக்கு பணம் என்ற வகையில் தமிழ் நாட்டில் மக்களுக்கு நமது நாடு என்ற பொறுப்புணர்ச்சி குறைந்து வருகிறது. எனது கிராமம் என்ற எண்ணத்தை நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் மக்களுக்கு தங்களது கிராமங்களில் மீது உள்ள பற்று தளர்ந்து வருகிறது.

மேலும் கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் சரி பெண்களும் தான் வெளியில் வேலைக்கு சென்று குடும்ப பாரத்தை சமாளிப்பதற்காக சம்பாதிக்கிறார்கள். ஆனால் பல ஆண்களும் சம்பாதித்தாலும் பலரும் குடிப் பழக்கத்திற்கு ஆளாகியிருப்பதால் வீட்டில் மனைவி சேமிக்கும் சம்பாதிக்கும் பணத்தையும் எடுத்து குடிக்க செலவழிப்பது தமிழ் நாட்டில் டாஸ்மேக் வருமானம் வருடா வருடம் கூடி வருவதிலிருந்தே தெரிகிறது. 

அதனால் மனைவியிடம் இருந்து கணவன் எடுத்து செல்லும் பணத்தை கருத்தில் கொண்டு அந்த பணத்திற்கு ஈடாக அரசாங்கம் இதனை உரிமைத்தொகை என்கிறதா ? 

இந்த உரிமை தொகையையும் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளிடமிருந்து மகன்கள் தாய்களிடமிருந்து அடித்து பிடுங்கி செல்லமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ? இதனை தடுக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ???? அல்லது அரசாங்கத்தால் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைய முடியுமா ???

இது வரை 50 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் அரசாங்கமே சாராய விற்பனை செய்ய ஆரம்பித்து குடிகாரர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதா ??? குறைந்துள்ளதா ?? தமிழ் நாட்டிற்கு வேலைக்கு அனுப்பக் கூடாது என்று வட இந்திய பெண்கள் கூட தங்கள் கணவன்களை பற்றி கவலை கொள்ளும் நிலையில் தமிழகம் உள்ளது.

தமிழ்நாட்டில் குடிகாரர் மறுவாழ்வு என்பது சொல்லளவில் மட்டுமே உள்ளது. பள்ளிக்கூட சிறுவர்கள் கூட குடிக்கும் சூழல் தான் இன்று தமிழ் நாட்டில் நிலவுகிறது. இதில் பல இடங்களில் பெண்கள் கூட குடித்து விட்டு விழுந்து கிடக்கிறார்கள். 

இந்தியாவில் கூட தமிழ்நாட்டில் தான் விதவைகள் அதிகம் என்று இந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. https://pmptn.wordpress.com/2013/06/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/


பெண்கள் உரிமைத் தொகை, பெண்கள் தங்கள் கணவங்களிடம் தினம் தினம் வாங்கும் அடி, உதை, மன உளச்சல் இருந்து மருந்து வாங்க பயன்படுமா ? தன் கணவனும் தன்னிடம் தினம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்ற சின்ன ஆசையை கூட அரசாங்கமே குக்கிராமத்தில் கூட திறந்து வைத்துள்ள சாராயக் கடைகள், உடைத்து விடுகின்றது. அரசாங்கத்தை கடந்த 56 ஆண்டுகளாக நடத்தும் கழக அரசுகள் தங்கள் கட்சிகாரர்கள் நடத்தும் சாராய ஆலைகள் அல்லது சாராய ஆலை நடத்தும் அதிபர்களின் மூலம் தங்கள் கட்சி வளர்ச்சிக்கும் தங்கள் வளர்ச்சிக்கும் அரசியல் வாதிகள் பயன்படுத்தி கொள்ளுகிறார்கள். 

இன்னும் பல கிராமங்களில் சரியான சாலை வசதிகள் இல்லை, பல கிராமங்களுக்கு பாம்பு கடி மருந்துகள் கூட கிடைப்பதில்லை. ஆனால் சாராயக் கடைகள் மற்றும் அதனை ஓட்டி நடத்தப்படும் பார்கள் , பலக்கார கடைகளுக்கு கட்சிக்காரர்களுக்கே தரப்படுகின்றன. இதனால் இந்த வியாபாரத்தை கூட்டிக் கொண்டே போக விரும்பும் வியாபாரிகளாகவே இந்த அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர். பெண்ணின் கல்யாணத்திற்கு மாப்பிள்ளை தேடும் பல பெற்றோர்கள் மணமகன் போதைக்கு அடிமையாக இருக்கக் கூடாது என்றே தேடுகின்றனர். ஆனால் தமிழ் நாட்டின் யதார்த்த நிலைமை குடிக்காத ஆண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதனால் உரிமை தொகை என்று அரசாங்கமே அழைப்பது இந்த நிகழ்கால நடைமுறையை ஏற்றுக் கொண்டாற் போல் உள்ளது. அதிலும் கலால் தீர்வை அமைச்சரே "காலை 7 மணிக்கு குடிப்பவர்களை குடிகாரர் என்று அழைக்கக் கூடாது " என்று சொல்லி அதிர்ச்சி அளிக்கிறார்.


காலை எந்த வேலைக்கும் போகிறவரும் குடித்துவிட்டு போனால் எந்த வேலை உருப்படியாக நடக்கும் ??  கட்டிட வேலைக்கு செல்லும் மேஸ்திரி குடித்துவிட்டு சாரத்தில் வேலை செய்ய வேண்டி வந்தால் எப்படிபட்ட தரமான வேலை நடக்கும் ??? 

உண்மையாகவே பெண்கள் மீது அக்கறை கொண்டு முதலில் டாஸ்மேக்கை மூடிவிட்டால், பெண்களுக்கு மாதா மாதம் வரவேண்டிய உரிமைத் தொகை  அவர்கள் கணவர்கள் இடமிருந்தே கிடைக்கும். கூடவே அவர்களிடையே சண்டை சச்சரவுகள் குறைந்து பரஸ்பர அன்பான வாழ்க்கை நடக்கும்.

காலை அவரவர் குழந்தைகளுக்கு அவரவரே உணவை ஊட்டிவிட்டால் அந்த குழந்தையின் இளமை காலம் மிகவும் அன்பாக இனிமையாக இருக்கும். ஆனால் அரசாங்கம் காலை உணவை பள்ளியில் வந்து சாப்பிட செய்தால் தகப்பனுக்கும் குழந்தைகளுக்கும் என்ன ஓட்டுதல் வரும் ? ஏற்கனவே பல தகப்பன்கள் குடிகாரர்களாகி மனைவி மக்களை கவனிப்பதில்லை. இதில் அரசாங்கமே மனைவிக்கு உரிமை தொகையும் குழந்தைகளுக்கு காலை உணவும் கொடுத்துவிட்டால், கணவருக்கும் குடும்பத்திற்குமான பந்தம் மெல்ல அறுந்து போய்விடாதா ?? ஆண்கள் பொறுப்புடன் இருக்க தேவையில்லை என்ற நடைமுறையை அரசாங்கமே கொண்டு வருவதாகிவிடாதா ???

அரசு மக்களுக்கு சுயமாக சம்பாதித்து வாழக் கூடிய வாழ்க்கையை உருவாக்க வேண்டுமா ? அல்லது யாரும் பொறுப்புடன் இருக்கத் தேவையில்லாத சூழ்நிலையை உருவாக்கி மொத்த அரசாங்கத்தையும் கடனாளி ஆக்கி மக்கள் நிரந்தர கடன் சூழலில் அடைக்க வழியே இல்லாத சூழ்நிலையை உருவாக்கலாமா ???

இன்னும் நாங்கள் ஆட்சி செய்யும் நாட்டில் ஒரு கோடி பெண்கள் நாங்கள் மாதம் கொடுக்கப் போகும் ₹1000/- நம்பி வாழ வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள் என்று அரசே அறிவிப்பது சாதனையா ?? வேதனையா ??

இன்னும் எங்கள் நாட்டில் பல இலட்சம் குழந்தைகள் காலை உணவே கிடைக்காத அளவிற்குத்தான் நமது மக்களாட்சி  இருக்கிறதா ? அந்த அளவிற்கு எந்த உபயோகமும் இல்லாத தந்தைகள் உடையது எங்கள் நாடு என்று பறை சாற்றுகிறோமா ??

அரசாங்கம் குடிபோதையினால் கிடைக்கும் வருமானத்தை அந்த போதையிலிருந்து மீட்க மட்டுமே பயன்படுத்தி படிபடியாக டாஸ்மேக்கை அறவே ஒழித்து போதையில்லா தமிழகம் உருவாகி, என்று அனைவரும் விடியற்காலையில் எழுந்து தெளிவாக சூரியனை பார்க்கிறோமோ அன்றே தமிழ் நாட்டிற்கு விடியும்.  

இலவசமாக வழங்கப்படும் எந்த பொருளும் தொகையும் யாருக்கும் மதிப்பளிக்காது. தமிழ் நாட்டில் இலவசத்திற்கு மக்கள் பழகி பழகி உழைப்பின் மீது இருக்கும் மதிப்பை இழந்து வருகின்றனர். மதிப்பில்லாத மக்களை ஆட்சி புரிபவர்கள் மதிப்பிழப்பார். 

தமிழர் மிகச் சிறந்த உழைப்பாளிகள் என்று ஆங்கிலேயர் கூட பல நாடுகளுக்கு தமிழர்களை அழைத்து சென்றனர். ஆனால் இனி வரும் காலங்களில் தமிழ் நாட்டுக்காரர்களை எந்த நாட்டிலும் உள்ளே விடமாட்டார்கள், வேலை கொடுக்க மாட்டார்கள். அதே போல் தமிழ் நாட்டில் உள்ள தொழிற்சாலைகளும் மெல்ல வெளியேற ஆரம்பிப்பார்கள். கனிம வள கொள்ளையில் மட்டும் முன் நிற்கும் தமிழகம் மலைகளை இழந்து ஆறுகளை இழந்து நாகரீகத்தை இழந்து புறநானூறு அகநானூறு  சங்கம் வைத்து வளர்த்த தமிழ் இந்த மண், அதற்குள் அள்ளப்பட்டிருக்கும்.


சகிருட்டிஸ் செப் 2023

Sakritease Sep 2023

No comments:

Post a Comment