யார் உண்மையான புரட்சித் தலைவர் ? எம் ஜி ஆரா ? மு க வா?
பட்டம் அளவில் இந்த புரட்சி தலைவர் பட்டம் திரு எம் ஜி ஆருக்கே வழங்கப்பட்டது. ஆனால் நடைமுறை அன்றாட வாழ்க்கையில் எம் ஜி ஆர் செய்த புரட்சி என்ன ? அவரால் சாதாரண மக்கள் வாழ்க்கை முறையில் என்ன மாற்றம் ஏற்பட்டது ?
எம் ஜி ஆர் சினிமா நடிகர்களில் உட்சபச்ச இடத்தை பிடித்தார். அவர் காலத்தில் வேறு எந்த நடிகரும் நினைத்தே பார்க்க முடியாத சம்பளத்தை வாங்கினார். வாழ் நாள் முழுவதும் அவர் உழைப்பினால் சம்பாதித்தத்தினால் மட்டுமே அவர் அனுபவித்த சொத்து சுகம் எல்லாம் வாங்கினார். தாம் சம்பாதித்ததின் பெரும் பகுதியை தானத்தில் செலவிட்டார். தேடி வந்தவருக்கு எல்லாம் அளவில்லாமல் உணவிட்டார்.
இதெல்லாம் சரி. எம் ஜி ஆரால் இன்னொரு எம் ஜி ஆரை உருவாக்க முடிந்ததா ? அவர் கட்சியில் ஜெயலலிதா மிக சிறந்த ஆளுமையாக உருவானார். எம் ஜி ஆரை விடவும் தனது கடைசி ஆட்சிக் காலத்தில் திறமையாகவே ஆட்சி புரிந்தார் என்றே சொல்லலாம். ஆனால் அவரைப் போல் இன்னொருவர் பொது மக்களில் காண முடிகிறதா ??
ஆனால் திரு மு கருணாநிதி போல் எவ்வளவு பேர் உள்ளனர் ?
இரண்டு நாட்களுக்கு முன் சட்டசபையில் முதல் அமைச்சர் திரு மு க ஸ்டாலின் சமீபத்தில் அண்ணா பல்கலை கழக வளாகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திரு. ஞான சேகரனை திமுக வின் அனுதாபி என்று வெளிப்படையாக சட்ட சபையில் விளக்கமளித்துள்ளார். இந்த நபர் தனது ஒரு மனைவி ஒரே ஒரு துணைவியுடன் ஒரே ஒரு வீட்டின் இரண்டு மாடிகளில் குடித்தனம் செய்வதாக செய்திகள் கூறுகின்றன. அவர் வீடு கட்டியுள்ள நிலமும் கோவிலுக்கு சொந்தமான நிலமாம். அப்படி என்றால் அவர் அதனை சென்னை தமிழில் "ஆட்டையை" போட்டுள்ளார் என்பதாகும். இவர் மீது 20 துக்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை இருப்பதாகவும் தெரிகிறது.இப்படிபட்டவருக்கு ஏன் திமுக வின் மீது அனுதாபம் வருகிறது ? எப்படிப்பட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலும் அதற்கு அரசியலில் ஒரு புள்ளியானாலே போதும் சட்டத்தையே இயற்றுகின்ற சட்டசபை உறுப்பினராக முடியும் என்பது நடைமுறையில் உள்ள விதி. "எவ்வளவு செலவு செய்ய முடியும் ?" என்ற கேள்விக்கு சரியான பதில் சொல்பவருக்கே இன்று தமிழ்நாட்டின் குக்கிராமத்தின் தலைவராக க் கூட ஆக முடியும். ஏன் ஒரு கிராமத்தின் கழகத்தின் பகுதி உறுப்பினராகக் கூட செலழிக்கும் திறனை பொறுத்தே பதவி. நேர்மையாக வரிக் கட்டி சம்பாதிக்கும் யாராலேயும் எப்பவும் கூடவே பத்து அடியாட்களை வைத்துக் கொண்டு பராமரிக்க முடியாது. பராமரிக்காத எந்த தலைவரையும் எந்த தொண்டரும் (குண்டரும்) மதிப்பதில்லை.
அதனால் சட்டத்துக்கு புறம்பான வருமானத்தின் மூலம் வர சட்ட வழக்குகளுக்கு ஆகும் செலவுகள் அனைத்திற்கும் சேர்த்தே சம்பாதிக்க வேண்டி உள்ளது. அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை அவரவர் திறமைக் கேற்ப அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அனைத்து வழிகளிலும் வருமானம் வரும் வழியிலேயே வடிவமைக்கப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் ஊழல்வாதி என்று யாரை கட்டம் கட்டி வழக்கு போட்டு திரு ஸ்டாலின் மாட்டிவிட்ட திரு செந்தில் பாலாஜி இன்று திரு ஸ்டாலின் முதல்வரான பின் "அப்பழுகற்ற அப்பாவியாக" தெரிகிறார். கட்டம் கட்டியதே நன்றாக கல்லா கட்டும் திறமையை நிரந்திர கப்பமாக்கும் வழி என்பதே என்றும் கழகங்களின் விதி.
புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்ட திரு. எம் ஜி ஆர் அவர்களின் ஆட்சியிலேயே " ஜேப்படி திருடன் போல் இருப்பவர் எம் எல் ஏ, முகமூடி கொள்ளைகாரன் போல் இருப்பது தான் அமைச்சர் " என்ற ஒரு கார்டூன் ஆனந்த விகடன் வார இதழில் வந்ததற்காக
அதன் ஆசிரியர் திரு எஸ்.பாலசுப்ரமணியம் கைது செய்யப்பட்டார். தான் என்ன தான் ஆட்சி அதிகாரத்தினால் நேரடியாக சம்பாதிக்காவிட்டாலும் தன்னுடைய அமைச்சர்கள் செய்யும் ஊழல்களை தடுக்க முடியாமல் போனதாலேயே அவர் மன ஊளைச்சலில் கூட இறந்திருக்கலாம். ஏனெனில் அவர் படங்களில் அவருக்காக எழுதப்பட்ட பாடல்களின் கருத்து. " நல்ல பேரை வாங்க வேண்டும் " என்ற எண்ணம் அவருக்கு என்றென்றும் மேலோங்கி இருந்தது.
தமிழ் சினிமா - காலத்தின் கண்ணாடி :
தமிழ் சினிமாவின் வளர்ச்சியை பார்த்தாலே தமிழகம் இயல்பு வாழ்க்கை எந்த நிலையில் இருக்கிறது என்பது தெளிவாகி விடும். இந்தியா விடுதலை அடைந்து திமுக 1967 ஆட்சிக்கு வரும் வரை " நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி" என்று நம்பும் அளவிற்கு இராஜாஜி, காமராஜர், பக்தவதசலம் போன்றவர்கள் ஆட்சியில் எம் ஜி ஆர் சூப்பர் ஸ்டாராக பாட முடிந்தது.அதன் பின் அண்ணாதுரையும் கருணாநிதியும் ஆள அரம்பித்த பிறகு தான் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆகி திரையில் "சிகெரெட் பிடித்தும் சாராயம் குடித்தும்" கலை வளர்த்து "ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலையில்லை " மக்களிடம் இனிமேல் ஆட்சியாளர்களை நம்பி பிரயோஜனமில்லை என்ற மன நிலையை படம் பிடித்தார். 1996ல் 'இனி தமிழ் நாட்டை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது " என்று சூளுரைத்தார். ஆனால் அவரே பெயரளவிற்கு கொள்ளைகாரர் சந்தன கடத்தல் தெய்வத்திரு வீரப்பன் கன்னட சூப்பர் ஸ்டார் திரு ராஜ் குமார் கடத்தப்பட்ட பின் தான் வீரப்பனின் அப்பாவித் தனத்தையும் அவரால் யார் ஆதாயமடைகிறார்கள் என்ற பின்புலத்தையும் உணர்ந்திருப்பார்.
கடந்த தேர்தலுக்கு முன் களம் கண்ட திரையுலகின் மாபெரும் நடிகரான திரு கமல் ஹாசன் "மக்கள் நீதி மய்யம்" கண்டார். ஆனால் நீதியை விட நிதி பெரியது என்பதை உணர்ந்து, இன்றைய காலகட்ட மக்களின் மன நிலையை வெளிப்படுத்தும் விதமாக தனது "விக்ரம்" திரைபடத்தில் வித விதமான துப்பாக்கிகளால் சுட்டு கொண்டே இருந்தார். இன்ற அரசியல் சூழ்நிலையில் எல்லாவற்றையும் "விக்கிறோம்" என்பதை உணர்ந்திருப்பார்.
ஆனால் "நிதி" யின் முக்கியத்துவத்தை அன்றே உணர்ந்த திரு தட்சிணாமூர்த்தி தன்னை கருணா"நிதி" ஆக்கி கொண்டார். ஞானம் வழங்கும் கடவுளின் பெயரை விட, தனம் தரும் வாழ்வியல் தான் முக்கியம் என்று உணர்ந்து தனது குடும்பத்தின் ஒவ்வொரு வாரிசின் பெயரிலும் செல்வம், செல்வி, நிதிகளை அவர் மிக தெளிவான தீர்க்க தரிசனத்துடன் பெயர்களாக வைத்ததுடன். நிதி வரும் ஆதாரங்களை அவர் "ஜீவ நதி" போல் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளார். நதி மூலம் ரிஷி மூலம் ஆராயக் கூடாது என்பார்கள் அது போல் கட்சியில் உறுப்பினர்கள் அவர்கள் மூலம் வரும் நிதியின் மூலத்தை ஆராயக் கூடாது என்பதை ஒரு கொள்கையாக கடைபிடித்து இதனை தன் "இரத்தத்தின் இரத்தங்களின்" குல தொழிலாக அரசியலையும் அரசையும் ஆக்கி விட்டு 2024ல் நூற்றாண்டை கண்ட தீர்க்க தரிசி.
"இரத்தத்தின் இரத்தமே" என்று பெயரளவில் கூறிய எம் ஜி ஆரால் தன் இரத்த சம்பந்தமுள்ளவர்களை அர்சியலிலோ சினிமாவிலோ ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்ட வர முடியவில்லை. இன்றளவும் கிராமத்தில் ஒரு திமுக காரன் செத்தாலும் அவன் சமாதியில் திமுகவின் கொடி போர்த்தும் அளவிற்கு அவன் இரத்தத்தில் "நிதி" யை சேர்த்து சென்றவர் தானே உண்மையான புரட்சித் தலைவர்.
இந்த பொங்கலுக்கு "நிதி" கொடுக்காம போனா பொங்கும் மக்களை கூட மத்திய அரசுக்கு "திதி" கொடுக்கும் படி பேசும் திறனை வளர்த்துவிட்டு சென்றுள்ளார் புரட்சி தலைவர் "நிதி தந்த செம்மல் "திரு முத்துவேல் கருணாநிதி.
எத்தனை கவியரசு கண்ணதாசன்கள் வந்து "வனவாசம்" எழுதினாலும்,
எத்தனை இராம சந்திரன்கள் வனவாசமே போனாலும், முத்தமிழ் அறிஞர் அவர்கள் வாயால் தமிழ் நாட்டு மக்களை அன்பாக அழைத்த " சோற்றால் அடித்த பிண்டங்கள்" என்ற நிலை மாறும் வரை "அண்ணாமலை"கள் தங்களை சாட்டையால் அடித்துக் கொள்ள வேண்டியது தான். ஜூன் 3 ல் பிறந்தவரின் சாதனையை,
ஜூன் 4 ல் பிறந்தவரால் மாற்ற முடியுமா ??
சகிருட்டிஸ்
Sakritease 10 Jan 2025
No comments:
Post a Comment