சமீபத்தில் எல் & டி நிறுவன தலைவர் திரு சுப்பிரமணியம்
நிறுவனத்தில் வேலை செய்யக் கூடியவர்கள் வாரத்திற்கு 90 மணி நேரமாவது வேலை செய்தால்
தான் இந்திய பொருளாதாரம் பல மடங்கு உயரும், வீட்டிலிருந்து எவ்வளவு மணி நேரம் தான்
மனைவியை முறைத்து கொண்டிருப்பீர்கள் என்று தன் கருத்தை வெளியிட்டிருந்ததார். இந்த கருத்து
பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் இன்ஃபொசிஸ் நிறுவனர்
திரு நாராயண மூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றதற்கே பலத்த
எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஐடி நிறுவனங்களில் பலவற்றிலும் தினமும் 8 மணி நேர வேலை வாரத்திற்கு
5 நாள் என்பதற்கே வார கடைசியில் மிகுந்த சோர்வடையும் மக்கள் இருக்கும் நாட்டில், அதுவும்
கரோனா லாக டவுனிற்கு பிறகு வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்ற நடைமுறை வந்த பிறகு
தினமும் 12 மணி நேரத்திற்கு வேலை செய்யும் அப்பாவி அம்மாஞ்சிகள் இருக்கிறார்கள்.
ஸ்மார்ட் வாட்ச் மூலம் டைம் பார்க்கும் இந்த காலத்தில் நேரத்தின்
அடிப்படையில் பணியினை சோதித்தால் இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பை எப்படி அதிகரிக்கும் ?என்று நாராயண மூர்த்தி போன்ற உழைப்பாளர்கள் சிந்திக்க வேண்டும். அதுவும் கணினி துறை
போன்று மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கும் பணியில் மூளையை சோர்வடியாமல் எப்படி பார்த்துக்
கொள்வது என்பதை தான் இந்த நிறுவனர்கள் சிந்திக்க வேண்டும். சோர்வான மூளையுடன் 90 மணி
நேரத்தில் செய்வதை சுறு சுறுப்பான மூளையுடன் 45 மணி நேரத்தில் அதை விட அதிக உற்பத்தி
திறன் கொண்டு வர முடியும் என்றால் அதை தான் இந்த நிறுவனங்கள் முன்னேடுக்க வேண்டும்.
அதுவும் தவிர ஒருவருக்கே பல இலட்சங்கள் சம்பளங்களை கொட்டி
கொடுத்து சிலரை மற்றும் அதி பணக்காரர்களாகவும் பலரை எப்போதும் நடுத்தர , கீழ் மட்ட
நிலையில் வைக்கும் போது சமுதாயத்தில் பிளவு
ஏற்பட்டு சமுதாயத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் தான் அதிகரிக்கும்.
நகரங்கள் திணறுகின்றன :
அதன் தொடர்ச்சியாக இன்று கிராமங்களில் பள்ளி கல்வி படித்த இளைஞர்கள் பலரும் விவசாயத்தில் இறங்காமல் நகர வேலைகளை நோக்கி நகர்கிறார்கள். அதனால் நகரங்கள் மீது தாங்க முடியாத சுமை ஏறி வருகிறது. 40 இலட்சம் மக்களுக்கு கட்டமைப்பை வைத்துக் கொண்டு சென்னை 80 இலட்ச மக்கள் தொகையில் திண்டாடி வருகிறது. பெங்களுரு என்ன செய்வது என்று தெரியாமல் மூச்சு முட்டி திணறி வருகிறது. தில்லியின் பாடு படு மோசம் அங்கு இருக்கும் ஒவ்வொரு நாளும் 20 சிகெரெட்டுகளை ஒரு சேர புகைக்கும் நிலையில் உள்ளது. இதனால் இந்த நகரங்களில் தங்கி வேலைக்கு வரும் ஒவ்வொரு ஊழியருக்கும் அதிக சம்பளங்களை வாரி வழங்க வேண்டி உள்ளது.
அதனால் ஃஜோஹோ (ZOHO ) நிறுவனர் திரு ஸ்ரீதர் வேம்பு செய்து வரும் புரட்சி போன்று கிராமங்களுக்கே IT நிறுவனங்களை கொண்டு செல்ல வேண்டும்.
விவசாயி - அதீத உழைப்பாளி - பலன் ?
அதே ஏதோ ஒரு காட்டின் அருகில் இருக்கும் விவசாயி, நாம் உணவில் கை வைக்க 24 மணி நேரமும் உழைத்தாக வேண்டும்.
வயலை உழுது, பதப்படுத்தி, நாள் கிழமை பார்த்து, விதை தூவி, நாற்றாங்காலில் நெல் நாற்று விட்டு, அதற்கு உரமிட்டு, நாற்றுகளை வயலில் நட ஆட்களை கூட்டி வந்து நட்டு, அதற்கு உரமிட்டு, பூச்சி மருந்து அடித்து, ஆட்களை கொண்டு களைகள் எடுத்து, அறுவடை செலவுகள் செய்து கடைசியாக கைவிட்டு செய்த செலவுக்கும் கடைசியாக கைக்கு வந்த வருமானத்திற்கு மிச்ச கணக்கை பார்த்தால் ₹10,000/- மிஞ்சலாம் ஒரு ஏக்கருக்கு.
120 நாட்கள் ஒரு விவசாயி, அவர் மனைவி, பல வீடுகளில் அவர்கள் பிள்ளைகள் என்று எல்லொரும் சேர்த்து சம்பாத்தியம் தான் - அதாவது 2500/- ஒரு மாதத்திற்கு வருமானம் = அதுவும் ₹ 83/ ஒரு நாளைக்கு. விவசாயி அவர் வயலில் மண் வெட்ட வரும் ஒரு ஆண் ஆள் கூலியே ₹800/ அதுவும் 6 மணி நேரத்திற்கு கொடுத்து விவசாயி சம்பாதிப்பது ஒரு நாளைக்கு ₹83/- தான்.
இதுவும் தவிர நெல் வயலில் இருக்கும் வரை குருவிகள், கொக்குகள், மயில்கள், குரங்குகள்,பல வகை பூச்சிகள், இவைகள் தவிர ஆடு , மாடுகளிடமிருந்து காக்கவும், இரவு நேரங்களில் பன்றிகள், யானைகள் பிற காட்டு விலங்குகள் என்ற பல வகை இடர்பாடுகளை சமாளிக்க 24 மணி நேரமே போறாது.
இதையும் தாண்டி நெல்லை விற்க போகும் போது விவசாயிகளால் அவர் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அவரால் விலை நிர்ணயம் செய்ய முடியாது. அதுவும் அந்த விலை எப்போது வேண்டும் என்றாலும் விலை மாறலாம். வேறெந்த தொழிலிலும் உறபத்தியாளர் தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அவர் தான் விலையை சொல்லுவார். ஆனால் விவசாயிகளால் அதுவும் முடியாது. அரசாங்கத்தால் குறைந்த பட்ச ஆதார விலை என்று பல விளை பொருட்களுக்கு 75 வருடங்களுக்கு பின்பும் இன்னமும் விவசாயிக்காக தர முடியவில்லை.
விவசாயம் & IT வேலை Hybrid
பல இலட்சம் சம்பளம் பெறும் ஐடி நிறுவன ஊழியர் 48 மணி நேரத்தை 90 மணி நேரம் என்ற பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிகிறது. ஆனால் 168 மணி நேரம் எந்த முணுமுணுப்பும் இல்லாமல் மொட்டை வெயிலில் வேலை செய்யும் தொழிலாளியின் மீது இந்த அதிக நேரம் விரும்பும் முதலாளிகளின் கவனம் விழ வேண்டும். இன்று கிராமத்தில் இருக்கும் விவசாயிகளை ஊக்கு விக்கும் விதமாக அவர்களின் பிள்ளைகளுக்கு கணிணி துறையிலும் பயிற்சி அளித்து அவர்கள் பெற்றோருக்கு விவசாய்த்தில் உதவிக்கொண்டே கிராமத்தில்யே வேலை செய்யும் Hybrid model அறிமுகம் செய்தால் நிறுவனங்களின் உற்பத்தி செலவை குறைக்கலாம், அதே சமயம் கிராமத்து இளைஞர்களுக்கும் வருமானமும் வரும் அவர்கள் விவசாய பொருட்களை விற்கும் கணிணி அனுபவமும் கிடைக்கும்.
விவசாயியின் வாழ்க்கையில் ஆரோக்கியம், மகிழ்ச்சி தேவை :
இதே தத்துவத்தை விவசாயிகளும் உணர வேண்டும். முதலில் விவசாயிகள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த முதலில் தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். தரமான உணவையே உண்ண வேண்டும். இன்று பல கிராமங்களில் விவசாயிகள் நெல்லை உற்பத்தி செய்து விற்று விட்டு ரேஷன் அரிசி வாங்கித்தான் உண்கிறார்கள். ஊருக்கே படியளக்கும் உழவர் ரேசன் பொருட்களை வாங்க வரிசையில் நின்று அரசாங்கம் வழங்கும் இலவச வேட்டி சேலை கட்டி வாழும் நிலையில் தான் உள்ளனர்.
இன்றைய உலகிற்கு என்ன தேவை ?
நாம் வேகத்திற்கும் ஆடம்பரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மனிதன் என்ற பிறப்பின் அற்புதத்தை முழுமையாக உணராமல் அவசரமாக இறந்து கொண்டிருக்கிறோம். எங்கெங்கும் சாலை விபத்துகள், வெடி விபத்துகள், காட்டுத் தீ, கடத்தல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை. இவை அனைத்தும் நாம் ஒருவரை ஒருவர் போட்டியாக நினைத்துக் கொண்டு, அடித்துக் கொண்டு நிம்மதியின்றி வாழ்ந்து வருகிறோம். பிரப்ஞ்சத்தின் அற்புத படைப்பான பூமியை உரிய மரியாதை தராமல் அவமதித்து இதை குப்பை மேடாக்கி விட்டு வேறொரு கிரகம் கிடைக்குமா என்று தேடி கொண்டு இருக்கிறோம்.
இயற்கை வளங்களை அழித்து காடுகளுக்குள் சாலைகள் போடுவதை வளர்ச்சி என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் வாழ வேண்டிய தருணம் இது.
இயற்கை வளங்களை அளவொடு நுகர்ந்து அனைத்து உயிர்களோடும் பகிர்ந்து வாழக் கூடிய உன்னதத்தை நோக்கி பயணிப்போம்.
சகிருட்டிஸ்
sakritease Jan 2015
No comments:
Post a Comment