A Nation progresses only with the Best Critics

Art of Critique with Love, care & Concern

Wednesday, January 22, 2025

Hail Vijay Fail Ajith விஜயை போற்றுவோம் அஜித்தை தூற்றுவோம்


 இந்த வாரத்தில் நடந்த  செய்திகள் இரண்டு:


பரந்தூர் சென்ற விஜயை வாழ்த்துவோம் :

கடந்த 900 நாட்களுக்கு மேலாக தங்கள் விவசாய நிலத்தையும் தங்கள் நீர் நிலைகளிலும் சென்னை பசுமை விமான நிலையத்திற்கு தாரை வார்க்க கூடாது என்று ஜன நாயக முறையில் அற வழியில் போராடும் கிராம மக்களை மாநில அரசோ மத்திய அரசோ கண்டுக் கொள்ளவில்லை. விவசாயமும் தண்ணீரும் வேண்டாம் , நாங்கள் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வர விமான நிலையமே தேவை என்று நினைக்கும் மக்களும், அரசியல்வாதிகளும் உள்ள ஒரு நாட்டில் புதியதாக த. வெ.க அரசியல் கட்சி தொடங்கியவர் வருகிறார் என்பது ஒரு நல்ல முன்னெடுப்பு.


விஜய் இதனை ஒரு அரசியல் ஸ்டண்ட் ஆகவே செய்தாலும் ஒரு உண்மையான விவசாயிகளின் போராட்டத்தின் மீது சில மணி நேரமாவது மீடியாவின் வெளிச்சம் விழும். 


தண்ணீரும் தமிழ்நாடும் : 


தண்ணீர் பற்றாக்குறையால் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா உடன் நெடுநாட்களாக போராடும் தமிழகம், எப்படி இருக்கும் நீர் ஆதாரங்களையும் இழக்க துணிகிறது?


எது நம்மிடம் இல்லையோ எது நமக்கு மிக அவசியமோ, அதை நாம் காப்பாற்றுவதில் கவனம் தேவையா ? இல்லையா?


விமானங்கள் பறக்காவிட்டாலும் நாம் வாழலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் வாழ முடியுமா ?


எது வளர்ச்சி எது வீக்கம் என்ற முதிர்ச்சி நம்மிடம் இல்லை.


கடந்த 50 வருட தமிழ் நாடு அரசியலுக்கு வந்தவர்கள் மிக பெரும்பான்மையானவர்கள் ஆற்று மணலை விற்று தான் பெரும் பணம் ஈட்டியுள்ளார்கள். இதனால் தான் தமிழ்நாட்டில் எந்த ஆறிலும் தண்ணீர் ஓடக் கூடாது என்று தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் விரும்புகிறார்கள் மற்ற மாநில அரசியல்வாதியை காட்டிலும். 


பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பு , ஏரிகள் ஆக்கிரமிப்பு சென்னையில் மழைக் காலங்களில் வெள்ளம் வந்து வருடா வருடம் திண்டாட்டம். நீரை எந்த விதத்திலும்  சரியாக கையாள தெரியாத தமிழகம், மேலும் மேலும் நீர் ஆதாரங்களையும் விவசாய நிலங்களையும் அழித்துக் கொண்டே போவதில் யாருக்கு நன்மை??



தாகத்திற்கு தண்ணீரும் உண்பதற்கு உணவும் தானே வாழ்க்கை வாழ்வதற்கு அடிப்படை ??? அதுவும் விளை நிலங்கள் தான் வேண்டும் என்று இத்தனை அடக்குமுறைகளை அரசாங்கம் நியாயமான உரிமை போராட்டத்தை அடக்குகிறது. 

வறண்ட புல்லு கூட முளைக்காத எத்தனை நிலங்கள் தமிழ் நாட்டில் உள்ளன.  அதை விடுத்து ஏன் மூன்று போகம் விளையும் விவசாய நிலமே விமானம் பறக்க வேண்டும் என்று ஏன் பிடுங்க வேண்டும்.?


சென்னை நகரை விட்டு வெளியேற வேண்டிய நேரமிது 

தமிழ்நாட்டின் வட கிழக்கில் இருப்பதாலேயே சென்னை தலை நகராக இருப்பதன் தகுதியை இழக்கிறது. அதுவும் தவிர பருவ நிலை மாற்றத்தினால் கடல் உயர்ந்து வருவதால் சென்னை நகரின் பல பகுதிகள் நீருக்கடியில் முழுகும் அபாயத்தில் உள்ளது. 


தமிழ் நாட்டின் தலை நகரை மாநிலத்தின் மத்தியில் திருச்சி போன்ற நகருக்கு அருகே நீர் நிலைகள், விவசாய நிலங்கள், மலைகள் போன்ற இயற்கை வளங்களை அழிக்காமல் ஒரு புது விமான நிலத்தை எதற்கும் பயன்படாத தரிசு நிலங்களில் புதிய விமான நிலையத்தை அமைத்து அதன் அருகே புதிய தலை நகரத்தையும் உருவாக்க வேண்டும். 


இரண்டாவது செய்தி: நடிகர் திரு அஜித் குமார் துபாயில் நடந்த அதி வேக கார் பந்தயத்தில் மூன்றாவதாக வந்து ஜெயித்த விஷயம். 

அஜித் என்றுமே சமூக அளவில் மிக பொறுப்பாக நடந்து கொள்ளக் கூடிய மனிதர். அதிலும் இந்த போட்டியை காண வந்த ரசிகர்களிடமும் "அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று கோஷம் போடும் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் எப்போ நல்லா வாழப் போறீங்க ?" என்ற மிகப் பொறுப்புள்ள மனிதராக ஒரு கேள்வி கேட்டார்.  

அதே போல் சாலை விபத்தில் அடிபடும் நபர்களை "தயவு செய்து ஆட்டோக்களில் ஏற்றி அனுப்பவதால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி எச்சரிக்கை செய்தியும் கொடுத்தார்" அதுவும் அஜித்தின் நண்பரை இது போல் ஆட்டோவில் ஏற்றி சென்றாதால் அவரின் முதுகு தண்டு வடம் முழுவதுமாக பாதிப்படைந்து அவர் இனிமேல் வாழ் நாள் முழுவதும் செயலிழுந்ததற்காக மிகவும் வருத்தப்படிறிருகிறார். 

ஆனால் அஜித் சார் " சாலை விபத்துகளுக்கு மூலக் காரணமே வேகம் -அதி வேகம் தான் "

அதாவது உங்கள் சொல், சிந்தனை அனைத்தும் உங்கள் ரசிகர்களின், பொது மக்களின் பாதுகாப்பு குறித்து இருக்கிறது. ஆனால் உங்கள் செயல் , ரேஸ் போகும் ஆர்வம் தான் என்றைக்கும் இளைஞர்களை தங்கள் பால் ஈர்க்கிறது. 

இன்று சாதாரணமாக சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகள் மிகவும் பயத்தில் யார் நம்மை எந்த விதத்தில் எந்த திசையில் இடிப்பார்களோ என்ற பயத்தில் நடக்கும் படியாக அதி வேகத்தில் சைலென்சரை எடுத்து விட்டு லைசென்ஸ் இல்லாமல் பைக்கையும் காரையும் ஓட்டுகிறார்கள். 


இன்று இந்தியா உலகளவில் சாலை விபத்துகளில் முன்னணியில் உள்ளது. சாலை விபத்து இறப்புகளில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறது.
ஏற்கனவே கடந்த 30 ஆண்டுகளாக தங்களை முன் மாதிரியாக கொண்டு பலரும் சாலைகளை ஒரு ரேஸ் டிராக்காகவே நினைத்து வண்டி ஓட்டி தானும் காயம் பட்டு பலரையும் காயப்படுத்தி , கொன்று இன்று இந்தியாவே ஒரு சாலை பாதுகாப்பு அற்ற நாடாக உலகளவில் தலை குனிந்து நிற்பதாக , இந்திய அரசின் சாலை போக்குவரத்து துறை அமைச்சர்  திரு நிதின் கட்கரி, மிகவும் வெட்கப்படுவதாக வருத்தப்படுகிறார்.


இந்த சூழ்நிலையில் நீங்கள் மிகவும் செலவு பிடிக்கும் அதி பணக்காரர்கள் மட்டுமே விளையாடக் கூடிய "அதி வேக கார் ரேஸ்" பந்தயங்களில் தாங்கள் பங்கு பெற்று வெற்றியும் பெற்றது, சமுதாயத்தில் முக்கியமாக ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்களை போல் செலவு செய்ய முடியாமல் இது போன்ற கார் ரேஸுகளில் கலந்து கொள்ள முடியாமல் தவிக்கும் உங்கள் ரசிகர்களும் இளைஞர்களும் அனைத்து பொது மக்களும் பயன் படுத்தும் சாலைகளையே ரேஸ் பந்தயமாக நினைத்து வண்டிகளை விரட்டி சக மக்களை கொன்று, முடமாக்கி வருகிறார்கள்.

இதில் நீங்கள் இந்த அதி வேக பந்தயங்களை ஊக்குவிக்கும் விதமாக, உங்கள் திரைபடங்களின் வெற்றிகளின் போது கூட பேட்டி தராத நீங்கள், இந்த வெற்றிக்கு பிறகு மிக உற்சாகமாக பேட்டி தருகிறீர்கள்.  தமிழ் நாடு அரசாங்கம் சென்னையில் கார் ரேஸ் நடத்துவதை பெருமையாக பாராட்டுகிறீர்கள். 

எந்த நாட்டில் ஏற்கனவே பொறுப்பற்ற முறையில் வண்டிகளை ஓட்டுபவர்கள் இருக்கும் நாட்டில், தெருவிற்கு தெரு சாராயம் ஊற்றி கொடுக்கும் நாட்டில் மிக அதி வேகமாக வண்டிகளை ஓட்ட ஊக்கப்படுத்தினால் நாட்டில் ஊனமுறுவோர்களின் எண்ணிக்கையும் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் தான் அதிகரிக்கும். வாழ்க்கை என்பது "மங்காத்தா" இல்லை அஜித் குமார். 

ஆனால் தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் வீட்டை விட்டு போனவர் வீடு திரும்புவாரா ? என்ற கவலையுடன் எத்தனை "ஷாலினி"க்கள் தினம் தினம் பதறுகிறார்கள்.  இங்கே உங்களை வழியனுப்பி விட்டு உங்களுக்கு விபத்து என்றவுடன் குடும்பத்துடன் துபாய்க்கு பறந்து வருகிறார். 

"விவேகம்" என்பது உங்கள் பட டைட்டில் அளவிற்கு தானா ? 

அனைவரும் மீதும்
அன்பான
அக்கறையுள்ள
அஜித் குமார்

ஆதரவாளர்கள்
அனைவருக்கும்
ஆணையிடுங்கள்
உடனடியாக
ஊரறிய
சபதமெடுங்கள்


"சாலைகள் ரேஸ் டிராக் அல்ல,
நான் சாலையில் பொறுப்புடன் நிதானமாக
வண்டிகளை ஓட்டி
அனைவரையும் பாதுகாப்பேன்" என்று.

அது போல் நீங்களும் அடிக்கடி ரேஸுக்கு போகிறேன்
"வேதாளம்" போல் ஓடிக் கொண்டே இருக்க
உங்கள் "காதலுக்கு மரியாதை" தரும் மனைவிக்கு
"விஸ்வாசுமாக" இருந்து 
"வாலி"யில் வரும் "வில்லன்" 
அஜித்துக்கு குட்பை சொல்லுங்கள் 
உங்கள் "விடாமுயற்சி"க்கு வாழ்த்துக்கள்
உங்கள் "குட் பேட் அக்லியில்" 
சமுதாயத்துக்கான "குட்"டை மட்டுமே
விரும்பும் "சிட்டிசன்"

ஏழை மக்களும் உங்களை பார்த்து எளிமையாக விளையாடக் கூடிய
விளையாட்டுகளை தேர்ந்து எடுத்து  விளையாடுங்கள். உங்கள் மனைவி விரும்பி விளையாடும் "Shuttle Badminton" பூப்பந்து போன்ற அனைவராலும் குறைந்த செலவில் விளையாடக் கூடியதை தேர்ந்து எடுங்கள். 


"பெற்றோரை மதிக்க வேண்டும்" என்று அறிவுரை கூறுவதை காட்டிலும்
நீங்கள் "வாழ்ந்து காட்டி வழிக் காட்டுவது" தான் அனைவருக்கும் அதிகம்
தாக்கத்தை தரும்.

அதனால் உங்கள் கார் ரேஸ் "அட்டகாசங்களுக்கு
இனிமேல் "ரெட்" கார்டு
என்பதை உங்கள் மகள், மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு
உணருங்கள். 

இன்று 23 ஜன் 2025 - உலகத்தையே தன் தாக்கத்தினால் மிரளச் செய்து பின் முக்கிய தருணத்தில் ஆன்மீக பேரொளியாக மாறிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள். நாட்டிற்காக உடல் துறக்கலாம் ஆனால் சாலையில் தேவையில்லாமல் வேகமாக சென்று உடல் உறுப்பு தானம் செய்யும் நிலைக்கு நம் வாழ்வை வீணடிக்க கூடாது என்று நினைவு கூறும் நாள்.


சகிருட்டிஸ்

Sakritease 23 Jan 2025





Friday, January 17, 2025

Weekly 168 Hours working Farmer வாரத்திற்கு 168 மணி நேரம் உழைக்கும் விவசாயி

 

மீபத்தில் எல் & டி நிறுவன தலைவர் திரு சுப்பிரமணியம் நிறுவனத்தில் வேலை செய்யக் கூடியவர்கள் வாரத்திற்கு 90 மணி நேரமாவது வேலை செய்தால் தான் இந்திய பொருளாதாரம் பல மடங்கு உயரும், வீட்டிலிருந்து எவ்வளவு மணி நேரம் தான் மனைவியை முறைத்து கொண்டிருப்பீர்கள் என்று தன் கருத்தை வெளியிட்டிருந்ததார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் இன்ஃபொசிஸ் நிறுவனர் திரு நாராயண மூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றதற்கே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஐடி நிறுவனங்களில் பலவற்றிலும் தினமும் 8 மணி நேர வேலை வாரத்திற்கு 5 நாள் என்பதற்கே வார கடைசியில் மிகுந்த சோர்வடையும் மக்கள் இருக்கும் நாட்டில், அதுவும் கரோனா லாக டவுனிற்கு பிறகு வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்ற நடைமுறை வந்த பிறகு தினமும் 12 மணி நேரத்திற்கு வேலை செய்யும் அப்பாவி அம்மாஞ்சிகள் இருக்கிறார்கள்.

ஸ்மார்ட் வாட்ச் மூலம் டைம் பார்க்கும் இந்த காலத்தில் நேரத்தின் அடிப்படையில் பணியினை சோதித்தால் இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பை எப்படி அதிகரிக்கும் ?என்று நாராயண மூர்த்தி போன்ற உழைப்பாளர்கள் சிந்திக்க வேண்டும். அதுவும் கணினி துறை போன்று மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கும் பணியில் மூளையை சோர்வடியாமல் எப்படி பார்த்துக் கொள்வது என்பதை தான் இந்த நிறுவனர்கள் சிந்திக்க வேண்டும். சோர்வான மூளையுடன் 90 மணி நேரத்தில் செய்வதை சுறு சுறுப்பான மூளையுடன் 45 மணி நேரத்தில் அதை விட அதிக உற்பத்தி திறன் கொண்டு வர முடியும் என்றால் அதை தான் இந்த நிறுவனங்கள் முன்னேடுக்க வேண்டும்.

அதுவும் தவிர ஒருவருக்கே பல இலட்சங்கள் சம்பளங்களை கொட்டி கொடுத்து சிலரை மற்றும் அதி பணக்காரர்களாகவும் பலரை எப்போதும் நடுத்தர , கீழ் மட்ட நிலையில்  வைக்கும் போது சமுதாயத்தில் பிளவு ஏற்பட்டு சமுதாயத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் தான் அதிகரிக்கும்.

நகரங்கள் திணறுகின்றன :

அதன் தொடர்ச்சியாக இன்று கிராமங்களில் பள்ளி கல்வி படித்த  இளைஞர்கள் பலரும் விவசாயத்தில் இறங்காமல் நகர வேலைகளை நோக்கி நகர்கிறார்கள். அதனால் நகரங்கள் மீது தாங்க முடியாத சுமை ஏறி வருகிறது.  40 இலட்சம் மக்களுக்கு  கட்டமைப்பை வைத்துக் கொண்டு சென்னை 80 இலட்ச மக்கள் தொகையில் திண்டாடி வருகிறது. பெங்களுரு என்ன செய்வது என்று தெரியாமல் மூச்சு முட்டி திணறி வருகிறது. தில்லியின் பாடு படு மோசம் அங்கு இருக்கும் ஒவ்வொரு நாளும் 20 சிகெரெட்டுகளை ஒரு சேர புகைக்கும் நிலையில் உள்ளது.  இதனால் இந்த நகரங்களில் தங்கி வேலைக்கு வரும் ஒவ்வொரு ஊழியருக்கும் அதிக சம்பளங்களை வாரி வழங்க வேண்டி உள்ளது.

அதனால் ஃஜோஹோ (ZOHO ) நிறுவனர் திரு ஸ்ரீதர் வேம்பு செய்து வரும் புரட்சி போன்று கிராமங்களுக்கே IT நிறுவனங்களை கொண்டு செல்ல வேண்டும். 

விவசாயி - அதீத உழைப்பாளி - பலன் ?

அதே ஏதோ ஒரு காட்டின் அருகில் இருக்கும் விவசாயி, நாம் உணவில் கை வைக்க 24 மணி நேரமும் உழைத்தாக வேண்டும்.

வயலை உழுது, பதப்படுத்தி, நாள் கிழமை பார்த்து, விதை தூவி, நாற்றாங்காலில் நெல் நாற்று விட்டு, அதற்கு உரமிட்டு, நாற்றுகளை வயலில் நட ஆட்களை கூட்டி வந்து நட்டு, அதற்கு உரமிட்டு, பூச்சி மருந்து அடித்து, ஆட்களை கொண்டு களைகள் எடுத்து, அறுவடை செலவுகள் செய்து கடைசியாக கைவிட்டு செய்த செலவுக்கும் கடைசியாக கைக்கு வந்த வருமானத்திற்கு மிச்ச கணக்கை பார்த்தால் ₹10,000/- மிஞ்சலாம் ஒரு ஏக்கருக்கு.

120 நாட்கள் ஒரு விவசாயி, அவர் மனைவி, பல வீடுகளில்  அவர்கள் பிள்ளைகள் என்று எல்லொரும் சேர்த்து சம்பாத்தியம் தான் - அதாவது 2500/- ஒரு மாதத்திற்கு வருமானம் = அதுவும் ₹ 83/ ஒரு நாளைக்கு. விவசாயி அவர் வயலில் மண் வெட்ட வரும் ஒரு ஆண் ஆள் கூலியே ₹800/ அதுவும் 6 மணி நேரத்திற்கு கொடுத்து விவசாயி சம்பாதிப்பது ஒரு நாளைக்கு ₹83/- தான். 

இதுவும் தவிர நெல் வயலில் இருக்கும் வரை குருவிகள், கொக்குகள், மயில்கள், குரங்குகள்,பல வகை பூச்சிகள், இவைகள் தவிர ஆடு , மாடுகளிடமிருந்து காக்கவும், இரவு நேரங்களில்  பன்றிகள், யானைகள் பிற காட்டு விலங்குகள் என்ற பல வகை இடர்பாடுகளை சமாளிக்க 24 மணி நேரமே போறாது. 

இதையும் தாண்டி நெல்லை விற்க போகும் போது விவசாயிகளால் அவர் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அவரால் விலை நிர்ணயம் செய்ய முடியாது. அதுவும் அந்த விலை எப்போது வேண்டும் என்றாலும் விலை மாறலாம். வேறெந்த தொழிலிலும் உறபத்தியாளர் தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அவர் தான் விலையை சொல்லுவார். ஆனால் விவசாயிகளால் அதுவும் முடியாது. அரசாங்கத்தால் குறைந்த பட்ச ஆதார விலை என்று பல விளை பொருட்களுக்கு 75 வருடங்களுக்கு பின்பும் இன்னமும் விவசாயிக்காக தர முடியவில்லை. 

விவசாயம் & IT வேலை Hybrid

பல இலட்சம் சம்பளம் பெறும் ஐடி நிறுவன ஊழியர் 48 மணி நேரத்தை 90 மணி நேரம் என்ற பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிகிறது. ஆனால் 168 மணி நேரம் எந்த முணுமுணுப்பும் இல்லாமல் மொட்டை வெயிலில் வேலை செய்யும் தொழிலாளியின் மீது இந்த அதிக நேரம் விரும்பும் முதலாளிகளின் கவனம் விழ வேண்டும். இன்று கிராமத்தில் இருக்கும் விவசாயிகளை ஊக்கு விக்கும் விதமாக அவர்களின் பிள்ளைகளுக்கு கணிணி துறையிலும் பயிற்சி அளித்து அவர்கள் பெற்றோருக்கு விவசாய்த்தில் உதவிக்கொண்டே கிராமத்தில்யே வேலை செய்யும் Hybrid model அறிமுகம் செய்தால் நிறுவனங்களின் உற்பத்தி செலவை குறைக்கலாம், அதே சமயம் கிராமத்து இளைஞர்களுக்கும் வருமானமும் வரும் அவர்கள் விவசாய பொருட்களை விற்கும் கணிணி அனுபவமும் கிடைக்கும். 


அதிக நேரம் வேலை - தரமானது அல்ல :அதே சமயம் இன்னொரு முக்கியமான விவரத்தையும் நிறுவன தலைவர்கள் கவனிக்க வேண்டும் பல மணி நேரங்கள் வேலை செய்வதனால் மட்டும் ஒரு பொருளுக்கோ / சேவைக்கோ மதிப்பு கூடாது. இதுக்கு இந்திய விவசாயியே சிறந்த உதாரணம். தான் செய்யும் வேலையை ஒருவர் விரும்பி செய்யும் போது தான் அந்த வேலையின் தரம் உயரும் அந்த வேலை செய்பவரின் மதிப்பு உயரும். 

விவசாயியின் வாழ்க்கையில் ஆரோக்கியம், மகிழ்ச்சி தேவை :

இதே தத்துவத்தை விவசாயிகளும் உணர வேண்டும். முதலில் விவசாயிகள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த முதலில் தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். தரமான உணவையே உண்ண வேண்டும். இன்று பல கிராமங்களில் விவசாயிகள் நெல்லை உற்பத்தி செய்து விற்று விட்டு ரேஷன் அரிசி வாங்கித்தான் உண்கிறார்கள். ஊருக்கே படியளக்கும் உழவர் ரேசன் பொருட்களை வாங்க வரிசையில் நின்று அரசாங்கம் வழங்கும் இலவச வேட்டி சேலை கட்டி வாழும் நிலையில் தான் உள்ளனர். 

இன்றைய உலகிற்கு என்ன தேவை ?

நாம் வேகத்திற்கும் ஆடம்பரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மனிதன் என்ற பிறப்பின் அற்புதத்தை முழுமையாக உணராமல் அவசரமாக இறந்து கொண்டிருக்கிறோம். எங்கெங்கும் சாலை விபத்துகள், வெடி விபத்துகள், காட்டுத் தீ, கடத்தல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை. இவை அனைத்தும்  நாம் ஒருவரை ஒருவர் போட்டியாக நினைத்துக் கொண்டு, அடித்துக் கொண்டு நிம்மதியின்றி வாழ்ந்து வருகிறோம்.  பிரப்ஞ்சத்தின் அற்புத படைப்பான பூமியை உரிய மரியாதை தராமல் அவமதித்து இதை குப்பை மேடாக்கி விட்டு வேறொரு கிரகம் கிடைக்குமா என்று தேடி கொண்டு இருக்கிறோம். 

இயற்கை வளங்களை அழித்து காடுகளுக்குள் சாலைகள் போடுவதை வளர்ச்சி என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் வாழ வேண்டிய தருணம் இது. 

இயற்கை வளங்களை அளவொடு நுகர்ந்து அனைத்து உயிர்களோடும் பகிர்ந்து வாழக் கூடிய உன்னதத்தை நோக்கி பயணிப்போம். 

 சகிருட்டிஸ்

sakritease Jan 2015

Friday, January 10, 2025

யார் உண்மையான புரட்சித் தலைவர் ? எம் ஜி ஆரா ? மு க வா?

 

யார் உண்மையான புரட்சித் தலைவர் ? எம் ஜி ஆரா ? மு க வா?

பட்டம் அளவில் இந்த புரட்சி தலைவர் பட்டம் திரு எம் ஜி ஆருக்கே வழங்கப்பட்டது. ஆனால் நடைமுறை அன்றாட வாழ்க்கையில் எம் ஜி ஆர் செய்த புரட்சி என்ன ?  அவரால் சாதாரண மக்கள் வாழ்க்கை முறையில் என்ன மாற்றம் ஏற்பட்டது ?

எம் ஜி ஆர் சினிமா நடிகர்களில் உட்சபச்ச இடத்தை பிடித்தார். அவர் காலத்தில் வேறு எந்த நடிகரும் நினைத்தே பார்க்க முடியாத சம்பளத்தை வாங்கினார். வாழ் நாள் முழுவதும் அவர் உழைப்பினால் சம்பாதித்தத்தினால் மட்டுமே அவர் அனுபவித்த சொத்து சுகம் எல்லாம் வாங்கினார். தாம் சம்பாதித்ததின் பெரும் பகுதியை தானத்தில் செலவிட்டார். தேடி வந்தவருக்கு எல்லாம் அளவில்லாமல் உணவிட்டார். 

இதெல்லாம் சரி. எம் ஜி ஆரால் இன்னொரு எம் ஜி ஆரை உருவாக்க முடிந்ததா ? அவர் கட்சியில் ஜெயலலிதா மிக சிறந்த ஆளுமையாக உருவானார். எம் ஜி ஆரை விடவும் தனது கடைசி ஆட்சிக் காலத்தில் திறமையாகவே ஆட்சி புரிந்தார் என்றே சொல்லலாம். ஆனால் அவரைப் போல் இன்னொருவர் பொது மக்களில் காண முடிகிறதா ??

ஆனால் திரு மு கருணாநிதி போல் எவ்வளவு பேர் உள்ளனர் ? 

இரண்டு நாட்களுக்கு முன் சட்டசபையில் முதல் அமைச்சர் திரு மு க ஸ்டாலின் சமீபத்தில் அண்ணா பல்கலை கழக வளாகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திரு. ஞான சேகரனை திமுக வின் அனுதாபி என்று வெளிப்படையாக சட்ட சபையில் விளக்கமளித்துள்ளார். இந்த நபர் தனது ஒரு மனைவி ஒரே ஒரு துணைவியுடன் ஒரே ஒரு வீட்டின் இரண்டு மாடிகளில் குடித்தனம் செய்வதாக செய்திகள் கூறுகின்றன. அவர் வீடு கட்டியுள்ள நிலமும் கோவிலுக்கு சொந்தமான நிலமாம். அப்படி என்றால் அவர் அதனை சென்னை தமிழில் "ஆட்டையை" போட்டுள்ளார் என்பதாகும். இவர் மீது 20 துக்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை இருப்பதாகவும் தெரிகிறது. 

இப்படிபட்டவருக்கு ஏன் திமுக வின் மீது அனுதாபம் வருகிறது ? எப்படிப்பட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலும் அதற்கு அரசியலில் ஒரு புள்ளியானாலே போதும் சட்டத்தையே இயற்றுகின்ற சட்டசபை உறுப்பினராக முடியும் என்பது நடைமுறையில் உள்ள விதி. "எவ்வளவு செலவு செய்ய முடியும் ?" என்ற கேள்விக்கு சரியான பதில் சொல்பவருக்கே இன்று தமிழ்நாட்டின் குக்கிராமத்தின் தலைவராக க் கூட ஆக முடியும். ஏன் ஒரு கிராமத்தின் கழகத்தின் பகுதி உறுப்பினராகக் கூட செலழிக்கும் திறனை பொறுத்தே பதவி. நேர்மையாக வரிக் கட்டி சம்பாதிக்கும் யாராலேயும் எப்பவும் கூடவே பத்து அடியாட்களை வைத்துக் கொண்டு பராமரிக்க முடியாது. பராமரிக்காத எந்த தலைவரையும் எந்த தொண்டரும் (குண்டரும்) மதிப்பதில்லை. 

அதனால் சட்டத்துக்கு புறம்பான வருமானத்தின் மூலம் வர சட்ட வழக்குகளுக்கு ஆகும் செலவுகள் அனைத்திற்கும் சேர்த்தே சம்பாதிக்க வேண்டி உள்ளது. அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை அவரவர் திறமைக் கேற்ப அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அனைத்து வழிகளிலும் வருமானம் வரும் வழியிலேயே வடிவமைக்கப்படுகிறது. 


அதிமுக ஆட்சியில் ஊழல்வாதி என்று யாரை கட்டம் கட்டி வழக்கு போட்டு திரு ஸ்டாலின் மாட்டிவிட்ட திரு செந்தில் பாலாஜி இன்று திரு ஸ்டாலின் முதல்வரான பின் "அப்பழுகற்ற அப்பாவியாக" தெரிகிறார். கட்டம் கட்டியதே நன்றாக கல்லா கட்டும் திறமையை நிரந்திர கப்பமாக்கும் வழி என்பதே என்றும் கழகங்களின் விதி.

புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்ட திரு. எம் ஜி ஆர் அவர்களின் ஆட்சியிலேயே " ஜேப்படி திருடன் போல் இருப்பவர் எம் எல் ஏ, முகமூடி கொள்ளைகாரன் போல் இருப்பது தான் அமைச்சர் " என்ற ஒரு கார்டூன் ஆனந்த விகடன் வார இதழில் வந்ததற்காக


அதன் ஆசிரியர் திரு எஸ்.பாலசுப்ரமணியம் கைது செய்யப்பட்டார். தான் என்ன தான் ஆட்சி அதிகாரத்தினால் நேரடியாக சம்பாதிக்காவிட்டாலும் தன்னுடைய அமைச்சர்கள் செய்யும் ஊழல்களை தடுக்க முடியாமல் போனதாலேயே அவர் மன ஊளைச்சலில் கூட இறந்திருக்கலாம். ஏனெனில் அவர் படங்களில் அவருக்காக எழுதப்பட்ட பாடல்களின் கருத்து. " நல்ல பேரை வாங்க வேண்டும் " என்ற எண்ணம் அவருக்கு என்றென்றும் மேலோங்கி இருந்தது.

தமிழ் சினிமா - காலத்தின் கண்ணாடி :

 தமிழ் சினிமாவின் வளர்ச்சியை பார்த்தாலே தமிழகம் இயல்பு வாழ்க்கை எந்த நிலையில் இருக்கிறது என்பது தெளிவாகி விடும். இந்தியா விடுதலை அடைந்து திமுக 1967 ஆட்சிக்கு வரும் வரை " நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி" என்று நம்பும் அளவிற்கு இராஜாஜி, காமராஜர், பக்தவதசலம் போன்றவர்கள் ஆட்சியில் எம் ஜி ஆர் சூப்பர் ஸ்டாராக பாட முடிந்தது. 


அதன் பின் அண்ணாதுரையும் கருணாநிதியும் ஆள அரம்பித்த பிறகு தான் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆகி திரையில் "சிகெரெட் பிடித்தும் சாராயம் குடித்தும்" கலை வளர்த்து "ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலையில்லை " மக்களிடம் இனிமேல் ஆட்சியாளர்களை நம்பி பிரயோஜனமில்லை என்ற மன நிலையை படம் பிடித்தார். 1996ல் 'இனி தமிழ் நாட்டை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது " என்று சூளுரைத்தார். 

ஆனால் அவரே பெயரளவிற்கு கொள்ளைகாரர் சந்தன கடத்தல் தெய்வத்திரு வீரப்பன் கன்னட சூப்பர் ஸ்டார் திரு ராஜ் குமார் கடத்தப்பட்ட பின் தான் வீரப்பனின் அப்பாவித் தனத்தையும் அவரால் யார் ஆதாயமடைகிறார்கள் என்ற பின்புலத்தையும் உணர்ந்திருப்பார்.

கடந்த தேர்தலுக்கு முன் களம் கண்ட திரையுலகின் மாபெரும் நடிகரான திரு கமல் ஹாசன் "மக்கள் நீதி மய்யம்" கண்டார். ஆனால் நீதியை விட நிதி பெரியது என்பதை உணர்ந்து, இன்றைய காலகட்ட மக்களின் மன நிலையை வெளிப்படுத்தும் விதமாக தனது "விக்ரம்" திரைபடத்தில் வித விதமான துப்பாக்கிகளால் சுட்டு கொண்டே இருந்தார். இன்ற அரசியல் சூழ்நிலையில் எல்லாவற்றையும் "விக்கிறோம்" என்பதை உணர்ந்திருப்பார். 


ஆனால் "நிதி" யின் முக்கியத்துவத்தை அன்றே உணர்ந்த திரு தட்சிணாமூர்த்தி தன்னை கருணா"நிதி" ஆக்கி கொண்டார். ஞானம் வழங்கும் கடவுளின் பெயரை விட, தனம் தரும் வாழ்வியல் தான் முக்கியம் என்று உணர்ந்து தனது குடும்பத்தின் ஒவ்வொரு வாரிசின் பெயரிலும் செல்வம், செல்வி, நிதிகளை அவர் மிக தெளிவான தீர்க்க தரிசனத்துடன் பெயர்களாக வைத்ததுடன். நிதி வரும் ஆதாரங்களை அவர் "ஜீவ நதி" போல் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளார். நதி மூலம் ரிஷி மூலம் ஆராயக் கூடாது என்பார்கள் அது போல் கட்சியில் உறுப்பினர்கள் அவர்கள் மூலம் வரும் நிதியின் மூலத்தை ஆராயக் கூடாது என்பதை ஒரு கொள்கையாக கடைபிடித்து இதனை தன் "இரத்தத்தின் இரத்தங்களின்" குல தொழிலாக அரசியலையும் அரசையும் ஆக்கி விட்டு 2024ல் நூற்றாண்டை கண்ட  தீர்க்க தரிசி. 


"இரத்தத்தின் இரத்தமே" என்று பெயரளவில் கூறிய எம் ஜி ஆரால் தன் இரத்த சம்பந்தமுள்ளவர்களை அர்சியலிலோ சினிமாவிலோ ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்ட வர முடியவில்லை. இன்றளவும் கிராமத்தில் ஒரு திமுக காரன் செத்தாலும் அவன் சமாதியில் திமுகவின் கொடி போர்த்தும் அளவிற்கு அவன் இரத்தத்தில்  "நிதி" யை சேர்த்து சென்றவர் தானே உண்மையான புரட்சித் தலைவர். 


இந்த பொங்கலுக்கு "நிதி" கொடுக்காம போனா பொங்கும் மக்களை கூட மத்திய அரசுக்கு "திதி" கொடுக்கும் படி பேசும் திறனை வளர்த்துவிட்டு சென்றுள்ளார் புரட்சி தலைவர் "நிதி தந்த செம்மல் "திரு முத்துவேல் கருணாநிதி. 

எத்தனை கவியரசு கண்ணதாசன்கள் வந்து "வனவாசம்" எழுதினாலும்,


எத்தனை இராம சந்திரன்கள் வனவாசமே போனாலும், முத்தமிழ் அறிஞர் அவர்கள் வாயால் தமிழ் நாட்டு மக்களை அன்பாக அழைத்த " சோற்றால் அடித்த பிண்டங்கள்" என்ற நிலை மாறும் வரை "அண்ணாமலை"கள் தங்களை சாட்டையால் அடித்துக் கொள்ள வேண்டியது தான். 

ஜூன் 3 ல் பிறந்தவரின் சாதனையை, 

ஜூன் 4 ல் பிறந்தவரால் மாற்ற முடியுமா ??

சகிருட்டிஸ்

Sakritease 10 Jan 2025