நீட் தலை(வலி) நகர போராட்டம் NEET Capital Demos

 நீட் தலை(வலி) நகர போராட்டம்


கடந்த சில வாரங்களாக நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்கள் தலை நகர் டெல்லியில் தீவிரமாகி வருகின்றன. இது மாணவர்கள் காவல்துறை மோதல்கள் ( ஜுலை 20-23, 2026 ) சமூக வலை தளங்களில் பெரும் விவதாமாக போய் கொன்டிருக்கிறது. இந்த சமயத்தில் இந்த கட்டுரை நீட் தேர்வு அவசியமா , இல்லையா ? என்பதை ஒரு நடு நிலை பார்வையோடு அலச முற்படுகிறது.

நீட்: மருத்துவத்தின் தரத்தைப் பாதுகாக்கும் தேர்வா?

நீட் முறைகேடு – மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் குற்றம்

நீட் தேர்வில் கேள்வித்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் அல்லது பிற முறைகேடுகள் நடைபெறுமானால், அவற்றை சாதாரண குற்றமாகக் கருதக் கூடாது. அது லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பையும், நாட்டின் மருத்துவக் கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையையும் சிதைக்கும் செயல். எனவே, இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

உயிரைக் காக்கும் தொழிலுக்கு உயர்ந்த தகுதி அவசியம்

ஒரு நாட்டின் மருத்துவத் தரம், அந்த நாட்டில் உருவாகும் மருத்துவர்களின் அறிவு, திறமை மற்றும் பொறுப்புணர்வைப் பொறுத்தே அமைகிறது. ஒரு பாலத்தை வடிவமைக்கும் பொறியாளரிடமும், ஒரு விமானத்தை இயக்கும் விமானியிடமும் நாம் மிக உயர்ந்த திறனை எதிர்பார்ப்பது போலவே, மனித உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவரிடமும் மிக உயர்ந்த தகுதியை எதிர்பார்ப்பது இயல்பானது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது, நாடு முழுவதும் ஒரே அளவுகோலில் மாணவர்களை மதிப்பிடும் நீட் (NEET) தேர்வு ஒரு தேவையான நடைமுறையாகக் கருதப்படுகிறது.

தரமற்ற மருத்துவரால் தரமான மருத்துவம் சாத்தியமா?

மருத்துவத் துறையில் நிகழும் ஒரு சிறிய தவறே ஒரு நோயாளியின் உயிரைப் பறிக்கக்கூடியது. எனவே, மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் அடிப்படை அறிவுத் திறனை கடுமையாக மதிப்பிடுவது அவசியம். "தரமில்லாத மருத்துவர்களை உருவாக்கிவிட்டு, உலகத் தரமான மருத்துவ சேவையை எப்படி எதிர்பார்க்க முடியும்?" என்ற கேள்விக்கு சமூகமும், அரசியலும், கல்வியாளர்களும் நேர்மையாகப் பதிலளிக்க வேண்டிய நேரம் இது.

நீட்டை எதிர்ப்பவர்களின் உண்மையான நோக்கம் என்ன?

நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் விவாதங்களின் மத்தியில் ஒரு முக்கியமான கேள்வி தொடர்ந்து எழுகிறது. நீட்டை எதிர்க்கும் அரசியல்வாதிகள் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்கள் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எத்தனை? நீட் அறிமுகத்திற்குப் பிறகு கேபிடேஷன் கட்டணம் (Capitation Fee) வசூலிக்கும் வாய்ப்புகள் குறைந்ததால் அவர்களுக்கு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதா? இத்தகைய கேள்விகள் பொதுவெளியில் எழும்போது, அவற்றுக்கான பதில்கள் வெளிப்படையான தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும். கல்விக் கொள்கை என்பது பொதுநலனை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்; தனிப்பட்ட அல்லது நிறுவன நலன்களை மையமாகக் கொண்டதாக இருக்கக் கூடாது.


தனியார் கல்லூரிகளில் பல கோடிகள் செலவழித்து டாக்டர் பட்டம் பெற்று வரும் டாக்டர்கள் எப்படி குறைந்த செலவில் எழைகளுக்கு மருத்துவம் பார்ப்பார் ??. பெரும்பான்மையான இது போல் செலவு செய்த பெற்றொர்கள் தங்கள் பிள்ளை செலவு செய்த பணத்தை சில வருடங்களில் பல மடங்காக சம்பாத்தித்து தருவார் என்றே முதலீடு செய்கிறார்கள். அதனால் இன்று தனியார் மருத்துமனைகளில் சாமான்யர்களுக்கு மருத்துவம் எட்டாக்கனியாகி வருகிறது. அரசாங்கம் பல மருத்துவமனைகளை துவங்கினாலும் பல மாநிலங்களிலும் சேவைத் தரம் அதல பாதாளத்தில் இருக்கிறது. 

இதனாலேயே மருத்துவ படிப்புக்கான செலவினை கட்டுக்குள் வைக்க வேண்டிய  கடமை அரசிற்கு இருக்கிறது. அதனால் மருத்துவர்களின் தரத்தினை உயர்த்த வேண்டி உள்ளது. அதற்கு ஒரு பொது தேர்வு அவசியமாகிறது.  

அரசியல்வாதிகளின் இரட்டை முகங்கள் இங்கே அம்பலமாகி விடுகிறது. தானே மருத்துவமனை நடத்தினாலும் அதனை நம்பாமல் வெளிநாட்டு மருத்துவமனைக்கு அரசியல்வாதிகள் ஓடுகிறார்கள். அதாவது நமது நாட்டு மருத்துவர்கள் மீது நமது நாட்டு அரசியல்வாதிகளுக்கே நம்பிக்கை இல்லை.  நேரடியாக அரசாங்கத்தை நடத்தும் அரசியல்வாதிகள் நமது அரசு மருத்துவமனைகளை நமது நாட்டு மருத்துவர்களை நம்பவில்லை என்பதையே இந்த செயல்கள் படம் பிடித்து காட்டுகின்றன. இன்றைக்கும் மருத்துவமனைகளில் சேவை குறைபாடு குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போராட்டங்கள் நடத்துவது அன்றாட வழக்கம் ஆகிவிட்டது.

மன உறுதியும் ஒரு மருத்துவரின் தகுதியே

நீட் தேர்வில் தோல்வியடைந்த சில மாணவர்கள் தற்கொலை போன்ற துயரமான முடிவுகளை எடுப்பது மிகவும் வேதனைக்குரியது. எந்தத் தேர்வும் ஒரு மனித உயிரைவிட பெரியதல்ல. மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனையும், மாற்று கல்வி வாய்ப்புகளும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில், மருத்துவர் தொழில் என்பது தினமும் உயிர்–மரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் துறையாகும். கடுமையான மன அழுத்தத்திலும் அமைதியாகவும் தெளிவாகவும் முடிவெடுக்கும் திறன் அந்தத் தொழிலின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். எனவே, மருத்துவத் துறைக்கு வருபவர்களின் கல்வித் திறனுடன் மனவலிமையும் முக்கியமான அம்சமாகக் கருதப்பட வேண்டும். 

அதிக மக்கள் தொகை – போட்டித் தேர்வின் தவிர்க்க முடியாத அவசியம்

இந்தியா போன்ற 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில், மருத்துவக் கல்லூரி இடங்கள் அனைவருக்கும் போதுமான அளவில் இல்லை. இந்த சூழலில் போட்டித் தேர்வுகள் என்பது விருப்பத் தேர்வல்ல; காலத்தின் கட்டாயம். வெளிப்படைத்தன்மையுடனும், சமமான அளவுகோலுடனும் திறமையை மதிப்பிடும் ஒரு தேசியத் தேர்வு இல்லாமல் நியாயமான மாணவர் சேர்க்கை முறையை உருவாக்குவது மிகவும் கடினம்.

மருத்துவர் வாழ்க்கை – பட்டம் பெற்ற பிறகுதான் உண்மையான படிப்பு தொடங்குகிறது

மருத்துவராக ஆகுவது ஒரு பட்டம் பெறுவதோடு முடிவடைவதில்லை. மருத்துவ அறிவியல் தினந்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. புதிய நோய்கள், புதிய சிகிச்சைகள், புதிய மருந்துகள் குறித்து வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டிய துறை இது. பல மருத்துவர்கள் நீண்ட நேரம் பணிபுரிகின்றனர்; இரவு–பகல் பாராமல் அவசர சிகிச்சை அளிக்கின்றனர். ஆரம்ப காலங்களில் அவர்கள் மேற்கொள்ளும் உழைப்புக்கு ஒப்பிடும்போது சம்பளமும் குறைவாக இருக்கக்கூடும். மனித உயிரைக் காப்பாற்றும் இந்தத் தொழில் மிகப்பெரிய அர்ப்பணிப்பை எதிர்பார்க்கிறது.

நோய் வராமல் தடுப்பதே சிறந்த மருத்துவம்

ஒரு நல்ல சுகாதாரக் கொள்கை என்பது மருத்துவமனைகளையும் மருந்துகளையும் மட்டும் மையமாகக் கொண்டதாக இருக்கக் கூடாது. நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதை விட, நோய் வராமல் தடுப்பதே சிறந்த அணுகுமுறை. எனவே அரசு யோகா, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை, இயற்கை மருத்துவம் (Naturopathy), பாரம்பரிய மருத்துவ முறைகள், தொடு சிகிச்சை (Acupuncture ), வர்மா போன்ற தடுப்பு சுகாதார அணுகுமுறைகளை, அவற்றின் பாதுகாப்பும் செயல்திறனும் அறிவியல் ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்ட அளவில் ஊக்குவிக்க வேண்டும். மக்களின் உடல்நலத்தை மேம்படுத்தும் எந்த அணுகுமுறையும் அறிவியல் மதிப்பீட்டுடன் வளர்க்கப்பட வேண்டும்.

பயத்தை விற்கும் மருத்துவ விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு தேவை

சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் விளம்பரங்கள் மக்களிடம் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன என்ற விமர்சனங்கள் உள்ளன. விழிப்புணர்வு அவசியம் என்றாலும், பயத்தைத் தூண்டும் விளம்பரங்கள் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்காது. சுகாதார விளம்பரங்கள் உண்மையான தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும்; பயத்தை அல்ல. இந்தத் துறையில் அரசு தெளிவான ஒழுங்குமுறைகளை வகுப்பது காலத்தின் தேவையாகும்.

எல்லா நோய்களுக்கும் மருந்து தேவையில்லை

பல வளர்ந்த நாடுகளில், மருத்துவர்கள் எல்லா நோய்களுக்கும் உடனடியாக மருந்து எழுதுவதில்லை. குறிப்பாக வைரஸ் தொற்றுகள் அல்லது தானாகக் குணமாகக்கூடிய உடல்நலக் குறைபாடுகளில், ஓய்வு, போதுமான தண்ணீர், சத்தான உணவு மற்றும் உடலின் இயற்கையான குணமடையும் செயல்முறைக்கு ஆதரவான ஆலோசனைகளே முதலில் வழங்கப்படுகின்றன. தேவையானபோது மட்டுமே மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதனால் தேவையற்ற மருந்துப் பயன்பாடு குறைவதுடன், ஆன்டிபயாட்டிக் எதிர்ப்புத் திறன் போன்ற உலகளாவிய பிரச்சினைகளையும் கட்டுப்படுத்த முடிகிறது.

தரமான மருத்துவமும் ஆரோக்கியமான சமூகமும் – இரண்டும் ஒன்றாக வேண்டும்

நீட் தேர்வு குறித்த கருத்து வேறுபாடுகள் தொடரலாம். ஆனால், இந்திய மக்களுக்கு பாதுகாப்பான, தரமான மருத்துவ சேவை கிடைக்க வேண்டுமென்றால், மருத்துவக் கல்வியில் உயர்ந்த தரமும் வெளிப்படைத்தன்மையும் கட்டாயம் இருக்க வேண்டும். அதே நேரத்தில், தேர்வு முறைகேடுகளுக்கு பூஜ்ய சகிப்புத்தன்மை, மாணவர்களின் மனநலப் பாதுகாப்பு, தடுப்பு சுகாதாரம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலான பல்வேறு சிகிச்சை அணுகுமுறைகளை ஊக்குவிக்கும் தேசிய சுகாதாரக் கொள்கையும் இணைந்து செயல்பட வேண்டும். திறமையான மருத்துவர்களையும், ஆரோக்கியமான இந்தியாவையும் உருவாக்குவது நமது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.

நீட் தேர்விற்காக சில வருடங்கள் சில லட்சங்கள் செலவழித்தும் தேர்வில் தோல்வி அடைந்து விரக்தி அடைந்துள்ளவர்கள் ஏராளம். அதனால் அவர்களுக்கு இந்த நீட் சிஸ்டம் மீது கோபம் வரலாம். ஆனால் இஞ்சினியரிங், ஆர்ட்ஸ், சட்டம் என்று எல்லா துறைகளிலும் இன்று போட்டி தேர்வு கட்டாயம் ஆகிவிட்டது. அதுவும் தவிர இன்றைய காலகட்டத்தில் திரு எலான் மஸ்க் சொலவதை போல் திறனை வளர்த்து கொள்வதிற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்துவிட்டன. பதின் வயதினரே பல "Start-Up" தொழில்கள் தொடங்கி வெற்றி பெறும் வழிகள் கிடைத்து விட்டன. இதில் "டாக்டர்களை" மட்டும் மிக உயர நிலையில் கடந்த காலங்களை போல் உயர்த்தி பார்க்க வேண்டிய அவசியமில்லை. 

அனைவரையும் சமமாக பார்க்கும் மனப்பக்குவம் :

யார் எந்த தொழில் செய்தாலும் அந்த மனிதரை மதிக்கும் மனப் பக்குவம் வளர்த்துக் கொண்டாலே ஒரு தொழிலை மட்டும் உஅயர்த்தி கொண்டாடி அதற்காக போட்டி போட வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய நவீன கால மருத்துவத்தில் உண்மையாக முன்னேற்றம் அடைந்து இருப்பது மருத்துவ கருவிகளில் மட்டுமே. முந்தைய கால ஆங்கில மருத்துவர்கள் கூட நாடி பிடித்தே நோய் என்ன என்று கண்டுபிடிப்பார்கள், ஆனால் இன்றைய பெரும்பான்மையான மருத்துவர்களால் நாடி பிடித்து பார்க்கும் திறமை பெருமளவிற்கு குறைந்துவிட்டது. இன்றைய மருத்துவ வளர்ச்சி பொறியியல் வல்லுனர்களால் தானே தவிர மருத்துவர்களால் அல்ல. அதனால மருத்துவத்தின் மீது உள்ள போலி பிம்பம் உடைய வேண்டும். பணம் சம்பாதிக்க  பல தொழில்கள் உள்ளன. மருத்துவத்திற்குள் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் மட்டுமே வர வேண்டும். பண முதலைகள் இந்த துறையை விட்டு விலக வேண்டும்.

அன்புடன்
சகிருட்டிஸ்
sakritease
23 Jul 2026


Comments